Thursday 13 October 2011

ஷைத்தானை வீட்டை விட்டு விரட்டுங்கள்!



''உங்கள் வீடுகளைக் கப்ருகளாக ஆக்கி விடாதீர்கள்! சூரத்துல் பகரா ஓதப்படும் வீட்டை விட்டும் ஷைத்தான் வெருண்டோடுகிறான்!" என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(முஸ்லிம் 212, 1860, திர்மிதீ 2877, அஹ்மத் 7821)

இந்த ஹதீஸ் இறைவேதமாகிய குர்ஆன் ஓதப்படாத வீடுகளைக் கப்ருகள் என கூறுகிறது.  சூரத்துல் பகராவைக் குறிப்பாக வீட்டில் ஓத வேண்டும். அதன் மூலம் ஷைத்தான் விரட்டப்படுகிறான் எனவும் இந்த ஹதீஸ் கூறுகிறது. 

உங்கள் வீடுகளில் சூரத்துல் பகரா ஓதுங்கள்! ஏனெனில் எந்த வீட்டில் சூரத்துல் பகரா ஓதப்படுகின்றதோ அந்த வீட்டில் ஷைத்தான் நுழைய மாட்டான்!' என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(முஸ்தத்ரக் 2062, 2063, 3029, தப்ரானீ 8564)

நம்முடைய இல்லங்கள் ஷைத்தான்களின் இருப்பிடங்களாக மாறிவிட்டன. இசை, சினிமா, பாட்டு, கூத்து என ஷைத்தானின் கீதங்கள் இசைக்கப்படுகிறது. ஆனால் ஷைத்தானை விரட்டுவதற்கான எந்த முயற்சியையும் நாம் செய்யாமல் இருக்கின்றோம்.ஷைத்தான் நுழையாமல் இருக்கவும், நுழைந்த ஷைத்தானை விரட்டவும் வீடுகளில் சூரத்துல் பகரா ஓதப்பட வேண்டுமென ஹதீஸ்கள் கூற, நாமோ ஷைத்தான்களை அழைத்து நமது இல்லங்களில் குடியமர்த்தி விருந்தும் படைத்து வருகின்றோம். எனவே முதலில் ஷைத்தானை விரட்ட வீட்டில் குர்ஆன் ஓதப்பட வேண்டும். இதை நாம் கவனத்திற்கொள்ள வேண்டும். மேலும் ஷைத்தானை விட்டு  அல்லாஹ்விடம் அடிக்கடி பாதுகாவல் கோர வேண்டும்

ஷைத்தான் ஏதாவதொரு (தவறான) எண்ணத்தை உம் மனத்தில் ஊசலாடச் செய்து (தவறு செய்ய உம்மைத்) தூண்டினால், அப்போது அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவீராக! மெய்யாகவே (அல்லாஹ்வாகிய) அவன் செவியுறுபவனாகவும், (யாவற்றையும் நன்கு) அறிபவனாகவும் இருக்கின்றான்.
(உலகப் பொதுமறை அல்-குர்ஆன் 7: 200)