Sunday, 20 November 2011

கோபத்தை கட்டுப்படுத்துபவனே சிறந்த வீரன்!


'(பயபக்தியுடையவர்கள்) கோபத்தை அடக்கிக்கொள்வார்கள். மனிதர்கள் செய்யும் தவறுகளை மன்னிப்பார்கள். '
(உலகப் பொதுமறை அல்-குர்ஆன் 3:134)

நபீ(ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து 'எனக்கு உபதேசம் செய்யுங்கள்' என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் 'கோபம் கொள்ளாதே!' எனக் கூறினார்கள். மீண்டும் அந்த மனிதர் 'உபதேசம் செய்யுங்கள்' எனக்கூறவே, மீண்டும் 'கோபம் கொள்ளாதே' என நபீ (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
         (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) - நூல் : புகாரீ)

'கோபத்தின் போது தன்னை கட்டுப்படுத்திக் கொள்பவனே சிறந்த வீரன் ஆவான்' என நபீ ( ஸல் ) அவர்கள் அருளினார்கள். 
(அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) - நூல்கள் : புகாரீ,முஸ்லிம்)

பொதுவாகவே ஷைத்தான், மனிதனை ஆக்கிரமிப்பதற்கு முதல்படியே அவனது கோபத்தைத் தூண்டி விடுவதுதான். தேவையில்லாத, சாதாரண  விஷயத்திற்கெல்லாம் ஒருவர் கோபப்பட்டால் அவரிடம் ஷைத்தான் குடி கொண்டிருக்கிறான் என்பதை தெளிவாக தெரிந்து கொள்ளலாம். எதிரில் யார் இருக்கிறார் என்று கூடத் தெரியாத அளவுக்கு பேசித் தீர்த்து விடுவார். சிலவேளை பேச்சுக்களையும் மீறி சட்டை கையை முழங்கைக்கு மேல் உயர்த்திக் கொண்டு பாய்வதற்கும் தயாராகி விடுவார். பின்விளைவுகளைப் பற்றிக்கூட யோசிப்பதில்லை. கோபம் கொண்ட அந்த வினாடியில் அவரது சிந்தனைத்திறன் செயலிழந்து விடுகிறது.

மேலும் ஒருவன் தன்னை வீரன் என்று காட்டுவதற்காகவும் கோபத்தைக் காட்டுவான். 'அவர் பெரிய கோபக்காரர். அவருக்கு கோபம் வந்தால் அவரை யாராலும் கட்டுப்படுத்தவே முடியாது' என்றெல்லாம் கோபம் கொள்பவர்களை சிலாகித்து ஒரு சிலர் கூறி அவரை வாழ்நாள் முழுவதும் கோபக்காரராக்கி விடுவார்கள். அதற்கு தகுந்தாற்போல் அவரும் தன்னை ஆக்கிக்கொள்வார். தேவையில்லாததற்கெல்லாம் கோபப்படுவார். இவருக்கு சமுதாயம் 'வீரன்', 'தைரியசாலி' என்றெல்லாம் பட்டம் சூட்டி விடும்!

கோபம் மனிதனுக்கு தேவை தான்! அதை சூழ்நிலைக்கேற்ப பயன்படுத்த வேண்டும். தீமைக்கு எதிராக சினம் கொள்வது இறை நம்பிக்கையாளரின்  அடையாளமாகும். அதே நேரத்தில் கட்டுப்படுத்த வேண்டிய நேரத்தில் கட்டுப்படுத்தவும் பழகிக் கொள்ள வேண்டும். நமது கோபம் நம்மையே மிகைத்துவிட அனுமதிக்கக் கூடாது!

நபீ (ஸல்) அவர்கள் அருகில் இரண்டு பேர் ஒருவரையொருவர் திட்டிக் கொண்டார்கள். அப்போது நாங்கள் நபி (ஸல்) அவர்கள் அருகில் அமர்ந்து கொண்டிருந்தோம். அவர்களில் ஒருவரின் முகம் சிவந்து விட்டிருக்க, கோபத்துடன் தம் தோழரைத் திட்டிக் கொண்டிருந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ''எனக்கு ஒரு (பிரார்த்தனை) வார்த்தை தெரியும். அதை இவர் சொல்வராயின் இவருக்கு ஏற்பட்டுள்ள கோபம்போய்விடும். 
'அவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம்' (சபிக்கப்பட்ட ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறேன்) என்பதே அச்சொல்லாகும்' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: சுலைமான் பின் ஸுரத் (ரலி). நூல்: புகாரீ:6115

Friday, 18 November 2011

உறவுகளைப் பேணுவோம்





இஸ்லாம் வலியுறுத்தும் சமூக உறவுடன் சம்பந்தப்பட்ட அமல்களில் குடும்ப உறவைப் பேணுவது மிக முக்கியமானதாகும். சமூக உருவாக்கம் எனும் இஸ்லாமிய இலட்சியத்தை அடைய குடும்ப உறவு சீர்படுதல் இன்றியமையாததாகும். இவ் வகையில் நல்ல சமூக மாற்றத்தை ஏற்படுத்த நல்ல குடும்ப உறவுகளை ஏற்படுத்த வேண்டும்.

 ஆனால் மார்க்க ஈடுபாடு உள்ள பலரிடம் கூட இரத்த உறவை விட நட்பையும், இடையில் ஒட்டிக்கொண்ட உறவையும் முக்கியத்துப் படுத்தும் நிலை இன்று தோன்றியுள்ளது. நட்புக்காகவும், இன்னும் பல தொடர்புகளுக்காகவும் நேரத்தையும், பணத்தையும் செலவிடத் தயாராகவுள்ள பலர; குடும்ப உறவுக்காக சில நிமிடங்களைக் கூட செலவிடத் தயாராக இல்லை.

நட்பு நாமாகத் தேர்வு செய்பவையாகும். இரத்த உறவு அல்லாஹ் தேர்வு செய்தவையாகும். இவர்கள் உன் அப்பா, அம்மா இவர்கள் உன் சித்தப்பா, பெரியப்பா, மாமா, அண்ணன், தம்பி என்பது அல்லாஹ் தேர்வு செய்தவையாகும். இந்த உறவுக்கு முக்கியத்துவம் கொடுப்பது தான் மார்க்கக் கடமையாகும்.

நபீ(ஸல்) அவர்கள் கூறினார்கள், ' உறவு (ரஹம்) என்பது, அளவிலா அருளாளன் (ரஹ்மான்) இடமிருந்து வந்த (அருட்கொடை) கிளையாகும். அல்லாஹ் இரத்த உறவைப் பார்த்து உன்னோடு ஒட்டி வாழ்பவனுடன் நானும் உறவு பாராட்டுவேன். உன்னை முறித்துக் கொள்பவனை நானும் முறித்துக்கொள்வேன்' என்று கூறுகிறான்.   
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) ஆதாரம் : புஹாரீ : 5988

இந்த ஹதீஸின் மூலம் குடும்ப உறவைப் பேணுவது எனபது அல்லாஹ்வுடனான உறவைப் பேணுவதற்குச் சமமானது என்பதை நாம் அறியலாம்.

ஒரு மனிதர், நபீ(ஸல்)அவர்களிடம் வந்து, '' அல்லாஹ்வின் தூதரே! என்னைச் சுவனத்தில் நுழைவித்து நரகத்தை விட்டும் தூரமாக்கக் கூடிய ஒர் அமலை எனக்குச் சொல்லித் தாருங்கள்'' என்றார். அதற்கு நபீ(ஸல்)அவர்கள், "நீ அல்லாஹ் ஒருவனையே வணங்க வேண்டும். அவனுக்கு எதையும் இணைவைத்து விடாதே! தொழுகையை நிலை நிறுத்து, ஸகாத்தும் கொடுத்து வா, குடும்ப உறவைப் பேணிக்கொள்" என்றார்கள். 
(அறிவிப்பவர் : ஹாலித் இப்னு ஸைத் அல் அன்ஸாரி(ரலி) ஆதாரம் : புஹாரீ, முஸ்லிம

நபீ(ஸல்) அவர்கள் கூறினார்கள் 'உறவை முறித்து வாழ்பவன் சொர்க்கத்தில் நுழையமாட்டான்'. 
அறிவிப்பவர்: ஜுபைர் இப்னு முத்யிம்(ரலி) ஆதாரம் : புஹாரீ: 5984

நபீ(ஸல்) அவர்கள் கூறினார்கள் 'தம் வாழ்வாதாரம் (ரிஸ்க்) விசாலமாக்கப்படுவதும; வாழ்நாள் நீட்டிக்கப்படுவதும், யாருக்கு மகிழ்ச்சி அளிக்குமோ அவர் தமதுஉறவைப் பேணி வாழட்டும். 
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி). ஆதாரம் : புஹாரீ :5985

'யார் அல்லாஹ்வையும், மறுமை நாளையும் ஈமான் கொள்கின்றாரோ அவர் குடும்ப உறவைச் பேணி நடக்கட்டும் ' என நபீ(ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி) ஆதாரம் : புஹாரீ, முஸ்லிம்

அல்லாஹ்வின் மீதும் மறுமையின் மீதும் ஒரு முஸ்லிம் கொண்டுள்ள ஈமானின் வெளிப்பாடுகளில் ஒன்றாகக் குடும்ப உறவைப் பேணி நடத்தலும் உள்ளது. 

குடும்ப உறவைத் துண்டித்தவன் சுவனம் நுழைய மாட்டான் என்ற அண்ணலாரின் எச்சரிக்கைக்கு பயந்து குடும்ப உறவைப் பேணி நடந்து அல்லாஹ்வின் அருளையும், அன்பையும் பெறுவோமாக!