Sunday, 20 November 2011

கோபத்தை கட்டுப்படுத்துபவனே சிறந்த வீரன்!


'(பயபக்தியுடையவர்கள்) கோபத்தை அடக்கிக்கொள்வார்கள். மனிதர்கள் செய்யும் தவறுகளை மன்னிப்பார்கள். '
(உலகப் பொதுமறை அல்-குர்ஆன் 3:134)

நபீ(ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து 'எனக்கு உபதேசம் செய்யுங்கள்' என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் 'கோபம் கொள்ளாதே!' எனக் கூறினார்கள். மீண்டும் அந்த மனிதர் 'உபதேசம் செய்யுங்கள்' எனக்கூறவே, மீண்டும் 'கோபம் கொள்ளாதே' என நபீ (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
         (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) - நூல் : புகாரீ)

'கோபத்தின் போது தன்னை கட்டுப்படுத்திக் கொள்பவனே சிறந்த வீரன் ஆவான்' என நபீ ( ஸல் ) அவர்கள் அருளினார்கள். 
(அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) - நூல்கள் : புகாரீ,முஸ்லிம்)

பொதுவாகவே ஷைத்தான், மனிதனை ஆக்கிரமிப்பதற்கு முதல்படியே அவனது கோபத்தைத் தூண்டி விடுவதுதான். தேவையில்லாத, சாதாரண  விஷயத்திற்கெல்லாம் ஒருவர் கோபப்பட்டால் அவரிடம் ஷைத்தான் குடி கொண்டிருக்கிறான் என்பதை தெளிவாக தெரிந்து கொள்ளலாம். எதிரில் யார் இருக்கிறார் என்று கூடத் தெரியாத அளவுக்கு பேசித் தீர்த்து விடுவார். சிலவேளை பேச்சுக்களையும் மீறி சட்டை கையை முழங்கைக்கு மேல் உயர்த்திக் கொண்டு பாய்வதற்கும் தயாராகி விடுவார். பின்விளைவுகளைப் பற்றிக்கூட யோசிப்பதில்லை. கோபம் கொண்ட அந்த வினாடியில் அவரது சிந்தனைத்திறன் செயலிழந்து விடுகிறது.

மேலும் ஒருவன் தன்னை வீரன் என்று காட்டுவதற்காகவும் கோபத்தைக் காட்டுவான். 'அவர் பெரிய கோபக்காரர். அவருக்கு கோபம் வந்தால் அவரை யாராலும் கட்டுப்படுத்தவே முடியாது' என்றெல்லாம் கோபம் கொள்பவர்களை சிலாகித்து ஒரு சிலர் கூறி அவரை வாழ்நாள் முழுவதும் கோபக்காரராக்கி விடுவார்கள். அதற்கு தகுந்தாற்போல் அவரும் தன்னை ஆக்கிக்கொள்வார். தேவையில்லாததற்கெல்லாம் கோபப்படுவார். இவருக்கு சமுதாயம் 'வீரன்', 'தைரியசாலி' என்றெல்லாம் பட்டம் சூட்டி விடும்!

கோபம் மனிதனுக்கு தேவை தான்! அதை சூழ்நிலைக்கேற்ப பயன்படுத்த வேண்டும். தீமைக்கு எதிராக சினம் கொள்வது இறை நம்பிக்கையாளரின்  அடையாளமாகும். அதே நேரத்தில் கட்டுப்படுத்த வேண்டிய நேரத்தில் கட்டுப்படுத்தவும் பழகிக் கொள்ள வேண்டும். நமது கோபம் நம்மையே மிகைத்துவிட அனுமதிக்கக் கூடாது!

நபீ (ஸல்) அவர்கள் அருகில் இரண்டு பேர் ஒருவரையொருவர் திட்டிக் கொண்டார்கள். அப்போது நாங்கள் நபி (ஸல்) அவர்கள் அருகில் அமர்ந்து கொண்டிருந்தோம். அவர்களில் ஒருவரின் முகம் சிவந்து விட்டிருக்க, கோபத்துடன் தம் தோழரைத் திட்டிக் கொண்டிருந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ''எனக்கு ஒரு (பிரார்த்தனை) வார்த்தை தெரியும். அதை இவர் சொல்வராயின் இவருக்கு ஏற்பட்டுள்ள கோபம்போய்விடும். 
'அவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம்' (சபிக்கப்பட்ட ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறேன்) என்பதே அச்சொல்லாகும்' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: சுலைமான் பின் ஸுரத் (ரலி). நூல்: புகாரீ:6115

No comments:

Post a Comment