Friday, 2 December 2011

பெரும்பாவங்கள்


பாவம் என்றால் என்ன என்பதை முதலில் நாம் தெரிந்து கொள்ளவேண்டும்.

நபீ(ஸல்)அவர்களிடம் நன்மையைப் பற்றியும் தீமையைப் பற்றியும் வினவினேன், அதற்கு அவர்கள் 'நல்லொழுக்கமே நன்மை எனப்படும். பாவம் என்பது அதைச்செய்யும் போது உன் உள்மனம் உன்னை எச்சரிக்கும், அதை பிறர் அறிவதை நீ வெறுப்பாய் ' என விளக்கமளித்தார்கள்.
(அறிவிப்பவர்: நவ்வாஸ் பின் ஸம்ஆன், நூல்: முஸ்லிம்)

ஒருமுறை நபீ(ஸல்);அவர்கள் தம் தோழர்களிடம் 'அழிவைத் தரும் ஏழு பாவங்களை' தவிர்த்துக் கொள்ளுமாறு எச்சரித்தார்கள். அவை யாவை? என நபீத்தோழர்கள் கேட்டபோது, பின்வருமாறு விளக்கமளித்தார்கள்: 

1. அல்லாஹ்வுக்கு இணை வைப்பது
2. சூனியம் செய்வது
3. இறைவன் தடுத்த ஓர் உயிரை அநியாயமாக கொலை செய்வது 
4. அநாதைகளின் சொத்துக்களை விழுங்குவது
5. வட்டிப்பொருளை உண்ணுவது 
6. போரில் புற முதுகு காட்டி ஓடுவது
7. விசுவாசியான ஒழுக்கமுள்ள பெண்கள் மீது அவதூறு கூறுவது.
(அறிவிப்பவர். அபூஹுரைரா(ரலி) நூல்கள் புகாரீ, முஸ்லிம்)

மேலே கூறப்பட்ட நபீமொழியில் பெரும் பாவங்கள் அனைத்தும் கூறப்படவில்லை. அழிவிற்கு கொண்டு செல்லக்கூடிய பாவங்களில் சில மட்டுமே கூறப்பட்டுள்ளது. கொலை, களவு, விபச்சாரம், தடுக்கப் பட்டவைகளை உண்ணுதல்,பருகுதல் , பொய், கோள் சொல்லுதல் போன்ற குற்றங்களும் பெரும் பாவங்களைச் சார்ந்தவையாகும். 

பெரும் பாவம் என்பது அல்லாஹ்வினாலும், நபீ(ஸல்) அவர்களாலும் விலக்கப்பட்டவைகளைக் குறிக்கும். இவற்றைச் செய்பவன்; இறை கோபத்திற்கும் தண்டனைக்கும் ஆளாக நேரிடும்.

பெரும் பாவங்களைத் தவிர்த்து வாழ்ந்தால் ஏனைய சிறு பாவங்களை மன்னிப்பதாக அல்லாஹ் கூறுகிறான்:-

உங்களுக்கு விலக்கப்பட்ட பெரும் பாவங்களிலிருந்து நீங்கள் விலகிக் கொண்டால், உங்களுடைய (சிறு)பாவங்களை உங்களை விட்டு நாம் போக்குவோம், உங்களை நாம், மதிப்பு மிக்க இடத்தில் புகுத்துவோம்.
  (உலக பொது வேதம் அல்-குர்ஆன் 4: 31)

(அல்லாஹ்வை நம்பிய) அவர்கள் பெரும் பாவங்களையும், மானக்கேடானவைகளையும் விட்டு விலகி இருப்பதுடன் தங்களுக்கு கோபமூட்டப்பட்ட சந்தர்ப்பத்திலும் (கோபமூட்டியவரை) மன்னித்து விடுவார்கள். 
(உலக பொது வேதம் அல்-குர்ஆன் 42: 37)

(இறை நம்பிக்கை கொண்ட) அவர்கள் சிறு தவறுகளைத் தவிர ஏனைய பெரும்பாவங்களிலிருந்தும் மானக்கேடனவற்றிலிருந்தும் விலகி இருப்பார்கள். நிச்சயமாக உமது இரட்சகன் மன்னிப்பதில் மிக்க தாராளமானவன்.
(உலக பொது வேதம் அல்-குர்ஆன் 53: 32)

' ஐந்து நேரத் தொழுகைகளும் , ஒவ்வொரு ஜும்ஆவும் , ஒவ்வொரு ரமளானும் , ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு இடைப்பட்ட காலங்களில் செய்யப் பட கூடிய பாவங்களுக்கு பரிகாரமாகும். (ஆனால்) இடைப்பட்ட காலங்களில் அவர் பெரும்பாவங்களில் ஈடுபடாத வரை என நபீ(ஸல்) கூறினார்கள்.            
 (ஆதாரம்: முஸ்லிம் , திர்மிதீ, அஹ்மத்)

No comments:

Post a Comment