Friday 2 March 2012

கப்ருடைய வாழ்க்கை


بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

'உங்களில் ஒருவர் மரணித்து அடக்கம் செய்யப்பட்டால் அவரிடம் கரு நிறமான நீல நிறக் கண்களுடைய இரண்டு மலக்குகள் வருவார்கள். அவர்கள் முன்கர் என்றும் நகீர் என்றும் சொல்லப்படுவார்கள்' அவர்கள் நபீ (ஸல்) அவர்களைக் குறித்து அவனிடத்தில் 'இந்த மனிதரைப் பற்றி நீ என்ன சொல்கிறாய்' என்று கேட்பார்கள். அவன் (மூமினாக இருந்தால்) 'அவர்கள் அல்லாஹ்வுடைய அடியாரும் அவனுடைய தூதருமாவார்கள் என்று சாட்சி கூறுகிறேன்' என்று கூறுவான். அப்பொழுது அந்த மலக்குகள் அவனை நோக்கி நீ இவ்வாறு கூறுவாய் என்பதை ஏற்கெனவே நாம் அறிந்திருந்தோம் என்று கூறுவார்கள். அதனைத் தொடர்ந்து அவனுடைய கப்ரு எழுபது முழங்கள் விசாலமாக்கப்படும். பின்னர் அந்த கப்ரு ஒளியேற்றப்பட்டு பிரகாசமாக்கப்படும். அவனை நோக்கி 'நீ உறங்குவாயாக!' என்று கூறுவார்கள். அவனோ அவர்களை நோக்கி என்னுடைய குடும்பத்திடம் நான் சென்று (எனக்குக் கிடைத்துள்ள இந்த நற்பாக்கியத்தை) அறிவித்து விட்டு வர என்னை விட்டு விடுங்கள் என்ற கூறுவான். அப்பொழுது அந்த மலக்குகள் 'மிக விருப்பத்துக்குரிய ஒருவரேயன்றி வேறெவரும் எழுப்பாதவுள்ள மணமகனின் உறக்கமாக நீ உறங்குவாயாக!' என்று கூறுவார்கள். அன்று முதல் மறுமை நாள் வரை அவன் உறங்கிக் கொண்டே இருப்பான்.

(அந்த இரு வானவர்கள்) முனாபிக் ஒருவனிடம் கேள்வி கேட்கும் போது, 'மக்கள் ஏதேதோ சொல்ல நான் கேட்டிருக்கிறேன். ஆனால் (இப்பொழுது எதுவும்) எனக்குத் தெரியாது' என்று கூறுவான். அப்பொழுது அந்த மலக்குகள் அவனை நோக்கி 'நீ இவ்வாறே பதிலளிப்பாய் என்பதை ஏற்கனவே நாம் அறிந்து வைத்திருந்தோம்' என்று கூறுவார்கள். அதனைத் தொடர்ந்து அவனை நெருக்குமாறு பூமிக்கு உத்தரவிடப்படும். அவனுடைய (வலது இடது) விலா எலும்புகள் ஒன்றோடொன்று பின்னிக்கொள்ளுமளவு அது அவனை நெருக்கும். அவனை அந்த இடத்திலிருந்து அல்லாஹ் எழுப்புகின்ற நாள்வரை அவன் வேதனை செய்யப்பட்டுக் கொண்டே இருப்பான் என்று நபீ (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) ஆதாரம்: திர்மிதி: 991)

கப்ரு ஒரு நபித்தோழரைக் கூட நெருக்கியது

கப்ரு என்பது எந்த ஒரு மனிதனையும் இலகுவாக விட்டுவிடாது. அல்லாஹ்வுடைய உத்தரவுப்படி வேதனைகளை அது அளிக்காமல் விட்டு விடாது. நபீத் தோழர்களில் நபீயவர்களுக்கு மிக விருப்பத்துக்குரிய ஒரு தோழரான ஸஃது (ரலி) அவர்களின் கப்ரு வாழ்க்கை நிலை நமக்குப் படிப்பினையூட்டக் கூடியதாய் அமைந்துள்ளது.

நபீ(ஸல்) அவர்கள் கூறினார்கள்: இந்த மனிதரின் (ஸஃது (ரலி)) மரணத்தால் தான் அர்ஷு குலுங்கியது . அவருக்காக வானங்களின் கதவுகள் திறக்கப்பட்டன . அவருடைய ஜனாஸா தொழுகையில் எழுபதாயிரம்  மலக்குகள் ஆஜரானார்கள். நிச்சயமாக அவரும் கப்ரில் ஒரு முறை நெருக்கப்பட்டார். பின்னர் அது அவருக்காக விசலமாக்கப்பட்டது.
(ஆதாரம்: நஸாயீ : 2028)

கப்ரிலுள்ள பாவிகளுக்கு காலையும், மாலையும் நரகம் காட்டப்படுகிறது.

'பிர்அவ்னுடைய ஜனங்களைத் தீய வேதனை சூழ்ந்து கொண்டது. காலையிலும் மாலையிலும் அவர்கள் நரக நெருப்பின் முன் கொண்டு போகப்படுகிறார்கள். மறுமை நாளிலோ பிர்அவ்னுடைய ஜனங்களைக் கடினமான வேதனையில் புகுத்துங்கள் (என்று கூறப்படும்)'  
(அல்குர்ஆன்: 40: 45-46)

நபீ(ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் இறந்துவிட்டால் அவர் தங்குமிடம் அவருக்குக் காலையிலும் மாலையிலும் எடுத்துக் காட்டப்படும். அவர் சொர்க்கவாசியாக இருந்தால் சொர்க்கத்திலிருப்பதாகவும் நரகவாசியாக இருந்தால் நரகத்திலிருப்பதாகவும் (எடுத்துக் காட்டப்படும்.) மேலும், அல்லாஹ் மறுமை நாளில் உன்னை எழுப்புகிற வரை இதுவே (கப்ரே) உன்னுடைய தங்குமிடம் என்றும் கூறப்படும்.  
(அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) ஆதாரம்: புகாரீ: 1379)

சூரிய வெப்பம் கடுமையாகிக் கொண்டிருந்த ஒரு சந்தர்ப்பத்தில் நபியவர்கள் வீட்டிலிருந்து வெளியேறி வந்தார்கள். அப்பொழுது ஒரு சப்தத்தை அவர்கள் செவி தாழ்த்திவிட்டு, யூதர்கள் (சிலர்) தமது கப்ருகளின் வேதனை செய்யப்பட்டுக் கொண்டிக்கிறார்கள் (அதுதான் இந்த சப்தம்) என்று நபீ(ஸல்) அவர்கள் கூறினார்கள்.                        
(அறிவிப்பவர்: அபூ அய்யூப்(ரலி) ஆதாரம்: புகாரீ: 1375)

கப்ரு வேதனை சிறிய பாவங்களாலும் ஏற்படுகிறது

இரு கப்ருகளைக் கடந்து நபீ(ஸல்) அவர்கள் சென்றபோது, இவ்விருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள்: ஆனால் பெரும் பாவத்திற்காக வேதனை செய்யப்படவில்லை. ஒருவர் கோள் சொல்லித் திரிந்தவர்;இ மற்றொருவர் சிறுநீர் கழிக்கும்போது மறைத்துக் கொள்ளாதவர் எனக் நபீ(ஸல்) அவர்கள் கூறினார்கள்
 (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) ஆதாரம்: புகாரி:1378)

கப்ர் வேதனைகளிலிருந்து பாதுகாப்பு

ஒரு யூதப் பெண் ஆயிஷா (ரலி) அவர்களிடம் வந்தபோது கப்ருடைய வேதனைபற்றிக் கூறிவிட்டு 'அல்லாஹ் உம்மைக் கப்ருடைய வேதனையிலிருந்து பாதுகாப்பானாக!' என்று கூறினார்கள். பின்னர் ஆயிஷா (ரலி) நபீயவர்களிடம் கப்ருடைய வேதனைப்பற்றி வினவினார்கள். அதற்கு நபீயவர்கள் 'ஆம் கப்ருடைய வேதனை உண்டு' என்று பதிலளித்தார்கள். 'அதன் பின்னர் நபீயவர்கள் எந்த ஒரு தொழுகை தொழுத போதிலும் கப்ருடைய வேதனையிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடாமலிருக்க நான் கண்டதில்லை' என்று கூறினார்கள்.
 (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) ஆதாரம்: முஸ்லிம்:920)

நபீ(ஸல்) அவர்கள் ஒவ்வொரு தொழுகையின் போதும் நான்கு வகையான சோதனைகளிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடாமலிருந்ததில்லை அதில் முதலாவதாக கப்ருடைய வேதனையிலிருந்தே பாதுகாவல் தேடினார்கள். அந்த துஆ பின்வருமாறு.

அல்லாஹும்ம இன்னி அவுது பிக மின் அதாபில் கப்ர். வமின் அதாபின்னார். வமின் ஃபித்னதில் மஹ்ய வல்மமாதஇ வமின் ஃபித்னதி மஸீஹித்  தஜ்ஜால்.

'அல்லாஹ்வே! நிச்சயமாக நான் கப்ருடைய வேதனை, நரக வேதனை வாழ்கையில் மரணத்தின் போதும் ஏற்படக்கூடிய சோதனை, தஜ்ஜாலுடைய வெளிப்படுவதால்;  ஏற்படக்கூடிய சோதைனை' ஆகியவற்றிலிருந்து உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.
(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) ஆதாரம்: புகாரி: 1377  முஸ்லிம்:924)

கப்ரில் ஒருவனுக்கு மீட்சி கிடைத்து விட்டால் அவனுக்கு மறுமையில் மீட்சி கிடைத்தது போன்றதாகும். கப்ருடைய வேதனையிலிருந்து நாம் அல்லாஹ்விடம் பாதுகாவல் கோரி வருவோமாக!


No comments:

Post a Comment