Wednesday 15 February 2012

மரணத் தருவாயில் மனிதனின் நிலை


 

மனிதனுக்கு மரணவேளை வந்துவிட்டால் அவருடைய உயிரை வானவர்கள் கைப்பற்றும் போது நிகழ்கின்ற நிகழ்வுகளை அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான்: 

நிச்சயமாக எவர்கள் 'எங்கள் இறைவன் அல்லாஹ்தான்' என்று கூறி, (அதன் மீது) உறுதியாக நிலைத்து நின்றார்களோ, அவர்கள்பால் மலக்குகள் இறங்கி, 'நீங்கள் பயப்படாதீர்கள்; கவலையும் பட வேண்டாம் – உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுவர்க்கத்தைக் கொண்டு மகிழ்ச்சி பெறுங்கள்' (எனக் கூறுவார்கள்)' 
(அல் குர்ஆன் 41:30)

'(ஏக இறைவனை) மறுப்போரின் முகங்களிலும், முதுகுகளிலும் வானவர்கள் அடித்து அவர்களைக் கைப்பற்றும் போது சுட்டெரிக்கும் வேதனையை அனுபவியுங்கள்! என்று கூறுவதை நீர்ப் பார்க்க வேண்டுமே! '
(அல் குர்ஆன்: 8:50)

மேற்கண்ட வசனங்கள் ஒருவருடைய மரண வேளையில் அவருக்கு உண்மை நிலை வெளிப்பட்டுவிடும் என்பதை தெளிவுப்படுத்துகின்றன.

உண்மையை உணர்ந்தபின், தாம் வாழும் போது செய்யாமல் விட்டுவந்த நல்ல காரியங்களைச் செய்வதற்காக தீய மனிதன் தமக்கு சிறிது அவகாசம் அளிக்குமாறு வேண்டுவான். ஆனால் காலம் கடந்து கைசேதப்பட்டு என்னபயன்? 

'உங்களில் ஒருவருக்கு மரணம் வரும்முன்னரே, நாம் உங்களுக்கு அளித்த பொருளிலிருந்து, தானதர்மம் செய்து கொள்ளுங்கள்; (அவ்வாறு செய்யாதது மரணிக்கும் சமயம்); 'என் இறைவனே! என் தவணையை எனக்கு சிறிது பிற்படுத்தக் கூடாதா? அப்படியாயின் நானும் தானதர்மம் செய்து ஸாலிஹான (நல்ல)வர்களில் ஒருவனாக ஆகிவிடுவேனே' என்று கூறுவான். ஆனால் அல்லாஹ், எந்த ஆத்மாவுக்கும் அதன் தவணை வந்துவிட்டால் (அதனைப்) பிற்படுத்த மாட்டான் - நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் தெரிந்தே இருக்கின்றான் ' 
(அல் குர்ஆன் 63:9,10)

'அவர்களில் ஒருவனுக்கு மரணம் வரும்போது, அவன் 'என் இறைவனே! என்னைத் திரும்ப (உலகுக்குத்) திருப்பி அனுப்புவாயாக!' என்று கூறுவான். 'நான் விட்டுவந்ததில் நல்ல காரியங்களைச் செய்வதற்காக' (என்றும் கூறுவான்). அவ்வாறில்லை! அவன் கூறுவது வெற்று வார்த்தையே(யன்றி வேறில்லை). அவர்கள் எழுப்பப்படும் நாள்வரையும் அவர்கள் முன்னே ஒரு தடுப்பு இருக்கிறது'
(அல் குர்ஆன் 23:99-100)

எல்லோரும் அருகிலிருந்தும் எவரையும் அவன் துணைக்கு அழைக்க முடிவதில்லை. அல்லது தான் காணும் காட்சியை தன்னுடன் இருப்பவர்களுக்கு காட்டவோ, விளக்கிக்கூறவோ கூட அவனால் முடிவதில்லை. தன்னந்தனியனாக, தன்னைப்படைத்த இரட்சகனை சந்திக்க வேண்டியவனாக அவன் இருக்கிறான்.

மரணத் தருவாயில` தீயோரின் நிலை

தீயவர்களின் உயிர் வாங்கப்படும்போதே அவர்களுக்கு வேதனை ஆரம்பமாகி விடுகிறது. தீயவன் மரணித்தவுடன் அவனது உயிரை வானவர்கள் எடுத்துச் செல்லும்போதே அவன் இழிவையும் அவமானத்தையும் அடையும் விதத்தில் வானவர்கள் அவனுக்கு மோசமான வரவேற்பு கொடுப்பார்கள்.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் 'இறைமறுப்பாளன் இந்த உலகத்தை விட்டுப் பிரிந்து மறுமையை நோக்கியவனாக இருக்கும் போது கருப்பு முகங்களைக் கொண்ட வானவர்கள் வானத்திலிருந்து அவனிடம் வருவார்கள். (உயிரைக் கொண்டுச் செல்வதற்காக) அவர்களுடன் துணிகள் இருக்கும். அவனது பார்வை எட்டும் தூரம் வரை வானவர்கள் அமர்ந்திருப்பார்கள். பின்பு உயிரைக் கைப்பற்றும் வானவர் வந்து அவனுடைய தலைக்கு அருகில் அமருவார். கெட்ட ஆன்மாவே! அல்லாஹ்வின் கோபத்துடனும் அதிருப்தியுடனும் நீ வெளியேறு! என்று கூறுவார். அப்போது அவன் உடலிலிருந்து உயிர் பிரித்தெடுக்கப்படும். ஈரமான கம்பளியில் உள்ள ரோமத்தை பிடுங்குபவரைப் போல் வானவர் உயிரை வாங்குவார். உயிரை வாங்கிய பிறகு கண் சிமிட்டும் நேரம் கூட தன் கையில் வைத்திருக்காமல், உடனே அந்த துணிகளில் உயிரைச் சேர்த்து விடுவார். பூமியில் இறந்து அழுகிப்போன உடலிலிருந்து வெளிவரும் துர்நாற்றத்தைப் போன்ற கெட்ட வாடை அதிலிருந்து வெளியேறிக் கொண்டிருக்கும். இந்த (கெட்ட) உயிருடன் (வானில்) வானவர்கள் ஏறிச் செல்வார்கள். அந்த உயிருடன் வானவர் கூட்டத்தை அவர்கள் கடந்து செல்லும் போதெல்லாம் இந்த கெட்ட ஆன்மா யாருடையது? என்று வானவர்கள் கேட்காமல் இருக்க மாட்டார்கள். உலகில் அவன் அழைக்கப்பட்டுக் கொண்டிருந்த கெட்ட பெயரைக் கூறி இன்னாருடைய மகன் இன்னார் தான் என்று கூறுவார்கள்.

இறுதியாக அவன் கீழ் வானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அவனுக்காக கதவைத் திறக்குமாறு கேட்கப்படும். ஆனால் அவனுக்கு கதவு திறக்கப்படாது. அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்கள் இந்த இறைவசனத்தை ஓதிக் காட்டினார்கள். 'நமது வசனங்களை பொய்யெனக் கருதி அதைப் புறக்கணிப்போருக்கு வானத்தின் வாசல்கள் திறக்கப்பட மாட்டாது. ஊசித்துவாரத்தில் ஒட்டகம் நுழையும் வரை அவர்கள் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்கள். இவ்வாறே குற்றவாளிகளை தண்டிப்போம். (அல் குர்ஆன 7: 40) கடைசியில் பூமியில் உள்ள சிஜ்ஜீன் என்ற ஏட்டில் இவனது கணக்கை பதிவு செய்யுங்கள் என்று கண்ணியமும், மகத்துவமும் மிக்க அல்லாஹ் கூறுவான்.
 (அறிவிப்பவர்: பரா இப்னு ஆஸிப் (ரலி) அஹ்மத் 17803)


'இறந்தவர் கெட்டவராக இருந்தால் தனக்கு கிடைத்துள்ள கஷ்டமான வாழ்வை நினைத்து அலறி கொண்டிருப்பார். தனக்கு கிடைத்துள்ள இன்பமான வாழ்வை எதிர்பார்த்தவராக நல்லவர் காத்துக் கொண்டிருப்பார். மரணித்த உடனேயே தீயவர்களின் புலம்பலும் நல்லவர்களின் சந்தோஷமும் ஆரம்பித்து விடுகின்றது.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'இறந்தவரின் உடல் (எடுத்து செல்ல தயாராக) வைக்கப்பட்டு அதை ஆண்கள் தங்கள் தோள்களில் தூக்கிச் செல்லும் போது, அந்த பிரேதம் நல்லறங்கள் புரிந்ததாக இருக்குமானால் என்னை விரைந்து கொண்டு செல்லுங்கள்: என்னை விரைந்து கொண்டு செல்லுங்கள்: என்று கூறும். அது நல்லறங்கள் புரியாததாக இருக்குமானால் கை சேதமே! என்னை எங்கு கொண்டு செல்கின்றீhகள்! என்று கூறும். இவ்வாறு கூறும் சப்தத்தை மனிதர்களைத் தவிர அனைத்தும் செவியுறும். மனிதன் அதைச் செவியுற்றால் மயங்கி விழுந்து விடுவான் '.
(அபூ ஸயிதுல் குத்ரி (ரலி) புகாரி: 1380)

மரணத் தருவாயில் நல்லோரின் நிலை

நல்லவர்கள் மரணிக்கும்போது வானவர்கள் சந்தோஷமான வார்த்தைகளை அவர்களிடம் கூறுவார்கள். அவர்கள் மரியாதையுடன் நடத்தப்படுவார்கள். சொர்க்கம் பரிசாக கிடைக்கப் போகிறது என்ற சுபச் செய்தியை மரணிக்கும் தருவாயில் வானவர்கள் அவர்களிடம கூறுவார்கள். எனவே தனது நிலை என்னவாகுமோ என்ற கவலை நல்லவர்களுக்கு இருக்காது. அவர்கள் நிம்மதியுடனும் சந்தோஷத்துடனும் மண்ணறை வாழ்க்கைக்குள் பிரவேசிப்பார்கள்.

'அமைதியுற்ற உயிரே! திருப்தியோடும் (இறைவனால்) திருப்தி கொள்ளப்பட்டும் உமது இறைவனிடம் செல்வாயாக! எனது அடியார்களில் சேர்ந்துக் கொள்வாயாக! எனது சொர்க்கத்தில் நுழைவாயாக! ' (என்று அல்லாஹ் கூறுவான்)
(அல்குர்ஆன்: 89 : 27)

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'மூமினான ஒரு அடியான் உலகத் தொடர்புகளை துண்டித்து விட்டு மறுமையை எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் போது சூரிய ஒளிக்கொப்பான பிரகாசமான முகத்துடன் வானிலிருந்து சில வானவர்கள் அவனிடம் வருவார்கள். அவர்கள் தங்களுடன் சுவர்க்கத்து துணிகளையும் சுவர்க்கத்து நறுமணத்தையும் வைத்துக் கொண்டு அவனுடைய பார்வைக்கு எட்டும் தூரத்தில் இருப்பார்கள். அப்போது உயிரைக் கைப்பற்றும் வானவர் வந்து அவனருகில் அமருவார். அவனை நோக்கி, நல்ல ஆத்மாவே! நீ இந்த உடலிலிருந்து வெளியேறி அல்லாஹ்வின் மன்னிப்பை நோக்கியும், அவனுடைய பொருத்தத்தை நோக்கியும் செல் ' என்று கூறுவார். தோல் பையிலிருந்து நீர் வழிந்து விடுவது போன்று அந்த ஆத்மா வெளியேறி விடும். அந்த வானவர் அதை எடுத்துச் செல்வார்.

அதனை அவர் எடுத்ததும் அருகிலுள்ள மலக்குகள் உடனே சுவர்க்கத்து துணியிலும், நறுமணத்திலும் அதனை வைத்து விடுவார்கள். அதிலிருந்து கஸ்தூரி வாடை வீசும். அந்த மலக்குகள் அதனை சுமந்தவர்களாக முதலாவது வானத்தை நோக்கி சென்று வானத்தை திறந்து விடுமாறு அதிலுள்ள மலக்குகளிடம் கூறுவார்கள். அம்மலக்குகள் வானத்தை திறந்து அந்த ஆத்மாவை வரவேற்பார்கள். ஒவ்வொரு வானத்திலும் இவ்விதமே நடைபெறும். ஏழாவது வானத்தை கடந்து சென்றதும்இ கண்ணியமிக்க அல்லாஹ் ஆத்மாவை சுமந்து சென்ற மலக்குகளை நோக்கி கூறுவான். எனது இந்த அடியானுடைய செயல்களை இல்லிய்யீனில் பதிவு செய்து விட்டும் பூமியிலுள்ள அவனது உடலில் அவனுடைய ஆத்மாவை சேர்த்து விடுங்கள்;...! ' 
(அறிவிப்பவர்: பரா இப்னு ஆஸிப் (ரலி) அஹ்மத் 17803)

இறைச்சந்திப்பு எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'யார் அல்லாஹ்வை சந்திக்க விரும்புகிறாரோ அவரைச் சந்திக்க அல்லாஹ்வும் விரும்புகின்றான். யார் அல்லாஹ்வைச் சந்திப்பதை வெறுக்கிறாரோ அவரைச் சந்திக்க அல்லாஹ்வும் வெறுக்கிறான் என்று சொன்னார்கள். அப்போது நான் அல்லாஹ்வின் தூதரே! மரணத்தை வெறுப்பதையா? (நீங்கள் சொல்கிறீர்கள்). அவ்வாறாயின் (மனிதர்களாகிய) நாங்கள் அனைவருமே மரணத்தை வெறுக்கத்தானே செய்வோம்? என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 'அதுவல்ல, மாறாக இறை நம்பிக்கையாளருக்கு (மரண வேதனையில்)இறைவன் கருணை புரியவிருப்பதாகவும் அவனைப்பற்றி அல்லாஹ் திருப்தி அடைந்திருப்பதாகவும் அவருக்குச் சொர்க்கத்தை வழங்கவிருப்பதாகவும் நற்செய்தி கூறப்படும். அப்போது அவர் அல்லாஹ்வை சந்திக்க விரும்புவார். அல்லாஹ்வும் அவரைச் சந்திக்க விரும்புவான். இறை மறுப்பாளருக்கு அல்லாஹ் வழங்கவிருக்கும் வேதனை குறித்தும் அல்லாஹ் கோபம் கொண்டிருப்பதும் குறித்து அறிவிக்கப்படும். அப்போது அவர் அல்லாஹ்வை சந்திப்பதை வெறுப்பார். அல்லாஹ்வும் அவரைச் சந்திப்பதை வெறுப்பான் '. 
(ஆயிஷா(ரலி) முஸ்லிம் 5208)

ஆகவே நம்முடைய செயல்களை நாம் தூய்மையாக்கி கொண்டு மரணத்தை அதிகம் அதிகம் நினைத்து இறைவனை சந்திப்பதை விரும்பக்கூடிய நன்மக்களாக வாழ்ந்து, மரணிக்க பிரார்த்திப்போம். நமக்கு இறுதி நேரம் வருவதற்கு முன் நம்முடைய நம்பிக்கைகளையும், செயல்களையும் குர்ஆன், நபிவழியின் அடிப்படையில் சீர்திருத்திக் கொள்;வோம்.



No comments:

Post a Comment