Wednesday 14 September 2011

எது தர்மம்?



'தர்மம் செய்வது எல்லா முஸ்லிம்களின் மீதும் கடமையாகும்;; '
என்று இறுதி இறைத்தூதர் பெருமானார் முஹம்மத் நபி(ஸல்) அவர்கள் கூறியபோது

மக்கள் : 'ஒருவருக்கு தர்மம் செய்ய எதுவும் கிடைக்கவில்லை என்றால்  என்ன செய்வது?' என்று கேட்டார்கள்.

நபி(ஸல்); : 'அவர் தம் இரு கைகளால் (அவர்) உழைத்துத் தாமும்  பயனடைவார். தர்மம் செய்(து பிறரையும் பயனடைய செய்)வார்!' என்று  கூறினார்கள்.

மக்கள் : 'அவருக்கு (உழைக்க உடலில்) தெம்பு இல்லையென்றால் அல்லது அவர் அதைச் செய்ய இயலா விட்டால் (என்ன செய்வது)? ' என்று கேட்டனர்.

நபி(ஸல்); : 'பாதிக்கப்பட்ட தேவையுடையோருக்கு அவர் உதவட்டும்!' என்றார்கள்.

மக்கள் : '(இதையும்) அவர் செய்ய (இயல)வில்லையென்றால்?' என்று கேட்டார்கள்.

நபி(ஸல்); : 'அப்போது அவர் நற்காரியங்கள் செய்யும்படி பிறரை ஏவட்டும்!' என்றார்கள்.

மக்கள்    : 'இதையும் அவர் செய்யாவிட்டால்?' என்று மீண்டும் கேட்டதற்கு 

நபி(ஸல்); : 'அவர் (பிறருக்கு எதுவும்) தீங்கு செய்யாமல் இருக்கட்டும். அதுவே அவருக்கு தர்மம் ஆகும்' என்றார்கள்.

அறிவிப்பவர் : அபூமூஸா அல் அஷ் அரீ (ரலி)- நூல்: புகாரி- ஹதீஸ் எண் 6022.

தர்மம் என்பது, 'பணத்தையும், பொருளையும் கொடுத்து உதவுவது'  என்று விளங்கி வாழ்ந்து வரும் இன்றைய கால கட்டத்திற்கு ஏற்ப, ஏறத்தாழ 1420 ஆண்டுகளுக்கும் முன்னர் மனித சமூகத்திற்கு வழி காட்ட அனுப்பப்பட்ட இறுதி இறைத்தூதர் நபி(ஸல்) அவர்கள மூலம் அல்லாஹ் மிகவும் அழகான முறையில் தர்மத்தின் விளக்கத்தை வழங்கியுள்ளான்.

சில்லறைகளை எடுத்து வறியவருக்கு இறைத்து விடுவது மட்டுமே தர்மம் என்று பலர் கருதுவது குறுகிய கண்ணோட்டம் என்பதை இந்த நபிமொழி  உணர்த்துகிறது.

தன்னிடம் எது இருக்கின்றதோ அதனை தேவையுடையவர்களுக்குக் கொடுப்பதும், தன்னிடம் எதுவுமே இல்லை எனில் மற்றவர்களை நன்மைகளை செய்வதற்கு ஏவுவதும் அதற்கும் இயலாதெனில் யாருக்கும் எவ்வித தீங்கும் இழைக்காமல் இருப்பதும் தர்மமே என்று இஸ்லாம் தர்மத்திற்கு விரிவான விளக்கம் அளிக்கின்றது. 

பெரும்பொருள் படைத்த செல்வந்தர்கள் மட்டுமின்றி தன்னிடம் அடுத்த வேளை உணவுக்குக் கூட வழியில்லாத ஒரு பரம ஏழையும் இவ்வழிகாட்டல் மூலம் தர்மம் செய்து நன்மைகளை இலகுவாகப் பெற முடியும்.

உடல் ஊனங்களோ, பலவீனங்களோ, முதுமையோ, வறுமையோ ஒருவர் தர்மம் செய்து நன்மைகள் பெற தடையாக நிற்காது என்றும், நல்லதைச் செய்ய தன்னால் இயலவில்லையென்றாலும், பிறரை அதற்காக ஏவுதலும், உபதேசித்தலும் கூட தர்மத்தின் நன்மையைப் பெற்றுத் தரவல்லவை எனும் உன்னதமான நல்வழியை இஸ்லாம் சமூகத்திற்குக் கற்றுத் தருகிறது.

No comments:

Post a Comment