கூடையும் சிறுவனும்!
வயதான விவசாயி ஒருவர் தன் சிறு வயது பேரனுடன் ஆறு ஓடும் ஓர் அழகிய மலைப்பிரதேசத்தின் அருகில் வாழ்ந்து வந்தார். ஒவ்வொரு நாளும் அதிகாலையில் தன் படுக்கை அறையில் அமர்ந்து குர்ஆனை ஓதுவது இவரின் அன்றாட வழக்கமாக இருந்து வந்தது. மற்றவர்கள் மீது மிகுந்த அன்பு செலுத்தும் தனது தாத்தாவைப் போன்றே தானும் ஆக வேண்டும் என்ற ஆசை கொண்ட அவரின் பேரன் அவரது ஒவ்வொரு செய்கையையும் கவனித்து அவற்றை தானும் செய்வதை வழக்கமாக கொண்டிருந்தான்.
ஒருநாள் பேரன் தாத்தாவைப் பார்த்து> 'தாத்தா! உங்களைப் போன்றே நானும் குர்ஆனைப் படிக்க முயற்சி செய்தேன். ஆனால் ஒன்றுமே விளங்கவில்லை. அதுமட்டுமன்றி குர்ஆனை மூடிவைத்ததும் படித்த கொஞ்சமும் மறந்தும் போய் விடுகிறது. எதுவுமே விளங்காமல் குர்ஆனைப் படிப்பதனால் அப்படி என்ன நன்மை நமக்கு வந்துவிடப்போகிறது?' என்று கேட்டான்.
சமைத்துக்கொண்டிருந்த தாத்தா> கூடையில் எஞ்சியிருந்த அடுப்புக்கரியை அடுப்பினுள் தள்ளி விட்டுக் கொண்டு பேரனிடம் திரும்பி காலியான கூடையை அவன் கையில் கொடுத்து> 'இந்த கரிக்கூடையில் ஆற்றுத்தண்ணீரை நிறைத்துக் கொண்டு வா!' என்றார். பேரனும் அவ்வாறே ஆற்றிற்குச் சென்று தண்ணீரை கூடையில் நிறைத்து வீடு திரும்பினான். ஆனால் ஆற்றங்கரையிலிருந்து வீட்டிற்குத் திரும்பி வந்து சேர்வதற்குள் கூடையில் கொண்டுவந்திருந்த தண்ணீர் முழுவதும் சிறிது சிறிதாக ஒழுகி கூடை காலியாகி விட்டிருந்தது. வருத்தமுடன் வீட்டினுள் நுழைந்து காலிக்கூடையைக் தாத்தாவிடம் காண்பித்தான். அவன் மனதின் வருத்தத்தைப் புரிந்து கொண்ட தாத்தா சிரித்துக் கொண்டே> 'சரி பரவாயில்லை! இம்முறை விரைவாக வீட்டிற்கு வந்து விடு!' என்று கூறி மறுபடியும் தண்ணீர் கொண்டு வர ஆற்றுக்கு அனுப்பினார்.
இம்முறை தண்ணீரை கூடையில் நிரப்பி விரைவாக பேரன் வீட்டிற்கு வந்து சேர்ந்தான். எனினும் கூடை முன்பு போலவே காலியாகிவிட> 'இக்கூடையில் தண்ணீர் கொண்டு வருவது சாத்தியமே இல்லை தாத்தா!' என்று மூச்சிரைக்க கூறிக் கொண்டே தண்ணீர் கொண்டுவர கூடைக்குப் பதிலாக வீட்டிலுள்ள மற்றொரு பெரிய பாத்திரத்தை எடுக்க முயன்றான். அப்போது அவனை தடுத்த தாத்தா> 'எனக்குப் பெரிய பாத்திரத்தில் நீர் தேவையில்லை. இந்தச் சிறு கூடையில் தான் வேண்டும். நீ கடுமையாக முயற்சிக்கவில்லை என்று எண்ணுகிறேன்!' என்று அவனைப் பார்த்து கூறினார்.
சிறு துளைகள் உடைய அக்கூடையில் ஆற்றிலிருந்து வீடுவரை தண்ணீரை ஒழுகாமல் தன்னால் கொண்டு வரமுடியாது என்று நன்றாகத் தெரிந்தும்> தாத்தாவிற்கு தன் கடுமையான முயற்சிகளைக் காண்பிக்க வேண்டும் என்ற ரோஷம் கொப்பளிக்க மறுபடி ஆற்றுக்கு ஓடினான் சிறுவன். ஆனால் பாவம் மறுபடியும் தோல்வியுடனே வீடு திரும்பினான்.
'தாத்தா! நான் மிகக் கடுமையாக முயற்சி செய்தும் பயன் ஏதுமில்லை என்பதை பார்த்தீர்களா?' என்று அவரிடம் கூடையைக் காட்டினான்.
'உனது இம்முயற்சி பலன் தரவில்லை என்றா நினைக்கிறாய்? கூடையை நன்றாகப் பார்!' என்றார் தாத்தா.
தண்ணீர் கொண்டுவர வேண்டும் என்ற கவனத்திலேயே இருந்த பேரன் முதல் முறையாக கூடையினுள் பார்வையை செலுத்தினான். அப்பொழுது தான் தாத்தாவிடமிருந்து வாங்கிய கூடைக்கும் தற்போது கையில் இருக்கும் கூடைக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்தான்.
ஆம்! அடுப்புக்கரியினால் அழுக்கேறியிருந்த அக்கூடை இப்போது உள்ளும் புறமும் தூய்மையாகி பளிச்சென்றிருந்தது.
அன்புடன் தன் பேரனை வாரி அணைத்துக் கொண்ட தாத்தா சொன்னார்> 'ஒருவர் தொடர்ந்து குர்ஆனை ஓதும் பொழுதும் இதுவே நிகழ்கிறது. குர்ஆன் ஓதும் போது அதன் பொருளறிந்து ஓதி அதன்படி செயல் படுவது சிறந்தது என்பதில் மாற்று கருத்து கிடையாது. ஆனால் பொருளறியாமல் அதை ஓதினாலும் அதன் ஒவ்வொரு எழுத்துக்கும் பத்து நன்மைகள் கிடைக்கும் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி(ஸல்)அவர்கள் கூறியுள்ளார்கள். நம்மை படைத்த இறைவனின் வார்த்தை இது என்ற எண்ணத்தில் ஒருவர் ஓதும் பொழுது ஓதுபவருக்கு அது புரியாமல் போனாலும்> ஓதுவது அனைத்துமே அவரின் நினைவில் நிற்காமல் போய் இந்தக் கூடைநீர் போல் வழிந்தோடி விட்டாலும் ஓதுபவரின் உள்ளம் இறையச்சத்தால் பரிசுத்தம் அடைகிறது. அவரின் வாழ்வில் தெளிவு பிறக்கிறது. இதுவே மனிதனைப் படைத்த இறைவன் புரியும் அற்புதமாகும்!' என்று கூறினார்.
இதனைக் கேட்ட சிறுவன் மகிழ்ச்சியுடன்> 'மிக்க நன்றி தாத்தா. இனி நானும் உங்களை போல் தினமும் அதிகாலையில் முதல் வேலையாக திருக்குர்ஆனை ஓதுவதை வழக்கமாக கொள்வேன்' என்று கூறினான்.
No comments:
Post a Comment