Wednesday, 15 February 2012

மரணத் தருவாயில் மனிதனின் நிலை


 

மனிதனுக்கு மரணவேளை வந்துவிட்டால் அவருடைய உயிரை வானவர்கள் கைப்பற்றும் போது நிகழ்கின்ற நிகழ்வுகளை அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான்: 

நிச்சயமாக எவர்கள் 'எங்கள் இறைவன் அல்லாஹ்தான்' என்று கூறி, (அதன் மீது) உறுதியாக நிலைத்து நின்றார்களோ, அவர்கள்பால் மலக்குகள் இறங்கி, 'நீங்கள் பயப்படாதீர்கள்; கவலையும் பட வேண்டாம் – உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுவர்க்கத்தைக் கொண்டு மகிழ்ச்சி பெறுங்கள்' (எனக் கூறுவார்கள்)' 
(அல் குர்ஆன் 41:30)

'(ஏக இறைவனை) மறுப்போரின் முகங்களிலும், முதுகுகளிலும் வானவர்கள் அடித்து அவர்களைக் கைப்பற்றும் போது சுட்டெரிக்கும் வேதனையை அனுபவியுங்கள்! என்று கூறுவதை நீர்ப் பார்க்க வேண்டுமே! '
(அல் குர்ஆன்: 8:50)

மேற்கண்ட வசனங்கள் ஒருவருடைய மரண வேளையில் அவருக்கு உண்மை நிலை வெளிப்பட்டுவிடும் என்பதை தெளிவுப்படுத்துகின்றன.

உண்மையை உணர்ந்தபின், தாம் வாழும் போது செய்யாமல் விட்டுவந்த நல்ல காரியங்களைச் செய்வதற்காக தீய மனிதன் தமக்கு சிறிது அவகாசம் அளிக்குமாறு வேண்டுவான். ஆனால் காலம் கடந்து கைசேதப்பட்டு என்னபயன்? 

'உங்களில் ஒருவருக்கு மரணம் வரும்முன்னரே, நாம் உங்களுக்கு அளித்த பொருளிலிருந்து, தானதர்மம் செய்து கொள்ளுங்கள்; (அவ்வாறு செய்யாதது மரணிக்கும் சமயம்); 'என் இறைவனே! என் தவணையை எனக்கு சிறிது பிற்படுத்தக் கூடாதா? அப்படியாயின் நானும் தானதர்மம் செய்து ஸாலிஹான (நல்ல)வர்களில் ஒருவனாக ஆகிவிடுவேனே' என்று கூறுவான். ஆனால் அல்லாஹ், எந்த ஆத்மாவுக்கும் அதன் தவணை வந்துவிட்டால் (அதனைப்) பிற்படுத்த மாட்டான் - நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் தெரிந்தே இருக்கின்றான் ' 
(அல் குர்ஆன் 63:9,10)

'அவர்களில் ஒருவனுக்கு மரணம் வரும்போது, அவன் 'என் இறைவனே! என்னைத் திரும்ப (உலகுக்குத்) திருப்பி அனுப்புவாயாக!' என்று கூறுவான். 'நான் விட்டுவந்ததில் நல்ல காரியங்களைச் செய்வதற்காக' (என்றும் கூறுவான்). அவ்வாறில்லை! அவன் கூறுவது வெற்று வார்த்தையே(யன்றி வேறில்லை). அவர்கள் எழுப்பப்படும் நாள்வரையும் அவர்கள் முன்னே ஒரு தடுப்பு இருக்கிறது'
(அல் குர்ஆன் 23:99-100)

எல்லோரும் அருகிலிருந்தும் எவரையும் அவன் துணைக்கு அழைக்க முடிவதில்லை. அல்லது தான் காணும் காட்சியை தன்னுடன் இருப்பவர்களுக்கு காட்டவோ, விளக்கிக்கூறவோ கூட அவனால் முடிவதில்லை. தன்னந்தனியனாக, தன்னைப்படைத்த இரட்சகனை சந்திக்க வேண்டியவனாக அவன் இருக்கிறான்.

மரணத் தருவாயில` தீயோரின் நிலை

தீயவர்களின் உயிர் வாங்கப்படும்போதே அவர்களுக்கு வேதனை ஆரம்பமாகி விடுகிறது. தீயவன் மரணித்தவுடன் அவனது உயிரை வானவர்கள் எடுத்துச் செல்லும்போதே அவன் இழிவையும் அவமானத்தையும் அடையும் விதத்தில் வானவர்கள் அவனுக்கு மோசமான வரவேற்பு கொடுப்பார்கள்.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் 'இறைமறுப்பாளன் இந்த உலகத்தை விட்டுப் பிரிந்து மறுமையை நோக்கியவனாக இருக்கும் போது கருப்பு முகங்களைக் கொண்ட வானவர்கள் வானத்திலிருந்து அவனிடம் வருவார்கள். (உயிரைக் கொண்டுச் செல்வதற்காக) அவர்களுடன் துணிகள் இருக்கும். அவனது பார்வை எட்டும் தூரம் வரை வானவர்கள் அமர்ந்திருப்பார்கள். பின்பு உயிரைக் கைப்பற்றும் வானவர் வந்து அவனுடைய தலைக்கு அருகில் அமருவார். கெட்ட ஆன்மாவே! அல்லாஹ்வின் கோபத்துடனும் அதிருப்தியுடனும் நீ வெளியேறு! என்று கூறுவார். அப்போது அவன் உடலிலிருந்து உயிர் பிரித்தெடுக்கப்படும். ஈரமான கம்பளியில் உள்ள ரோமத்தை பிடுங்குபவரைப் போல் வானவர் உயிரை வாங்குவார். உயிரை வாங்கிய பிறகு கண் சிமிட்டும் நேரம் கூட தன் கையில் வைத்திருக்காமல், உடனே அந்த துணிகளில் உயிரைச் சேர்த்து விடுவார். பூமியில் இறந்து அழுகிப்போன உடலிலிருந்து வெளிவரும் துர்நாற்றத்தைப் போன்ற கெட்ட வாடை அதிலிருந்து வெளியேறிக் கொண்டிருக்கும். இந்த (கெட்ட) உயிருடன் (வானில்) வானவர்கள் ஏறிச் செல்வார்கள். அந்த உயிருடன் வானவர் கூட்டத்தை அவர்கள் கடந்து செல்லும் போதெல்லாம் இந்த கெட்ட ஆன்மா யாருடையது? என்று வானவர்கள் கேட்காமல் இருக்க மாட்டார்கள். உலகில் அவன் அழைக்கப்பட்டுக் கொண்டிருந்த கெட்ட பெயரைக் கூறி இன்னாருடைய மகன் இன்னார் தான் என்று கூறுவார்கள்.

இறுதியாக அவன் கீழ் வானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அவனுக்காக கதவைத் திறக்குமாறு கேட்கப்படும். ஆனால் அவனுக்கு கதவு திறக்கப்படாது. அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்கள் இந்த இறைவசனத்தை ஓதிக் காட்டினார்கள். 'நமது வசனங்களை பொய்யெனக் கருதி அதைப் புறக்கணிப்போருக்கு வானத்தின் வாசல்கள் திறக்கப்பட மாட்டாது. ஊசித்துவாரத்தில் ஒட்டகம் நுழையும் வரை அவர்கள் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்கள். இவ்வாறே குற்றவாளிகளை தண்டிப்போம். (அல் குர்ஆன 7: 40) கடைசியில் பூமியில் உள்ள சிஜ்ஜீன் என்ற ஏட்டில் இவனது கணக்கை பதிவு செய்யுங்கள் என்று கண்ணியமும், மகத்துவமும் மிக்க அல்லாஹ் கூறுவான்.
 (அறிவிப்பவர்: பரா இப்னு ஆஸிப் (ரலி) அஹ்மத் 17803)


'இறந்தவர் கெட்டவராக இருந்தால் தனக்கு கிடைத்துள்ள கஷ்டமான வாழ்வை நினைத்து அலறி கொண்டிருப்பார். தனக்கு கிடைத்துள்ள இன்பமான வாழ்வை எதிர்பார்த்தவராக நல்லவர் காத்துக் கொண்டிருப்பார். மரணித்த உடனேயே தீயவர்களின் புலம்பலும் நல்லவர்களின் சந்தோஷமும் ஆரம்பித்து விடுகின்றது.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'இறந்தவரின் உடல் (எடுத்து செல்ல தயாராக) வைக்கப்பட்டு அதை ஆண்கள் தங்கள் தோள்களில் தூக்கிச் செல்லும் போது, அந்த பிரேதம் நல்லறங்கள் புரிந்ததாக இருக்குமானால் என்னை விரைந்து கொண்டு செல்லுங்கள்: என்னை விரைந்து கொண்டு செல்லுங்கள்: என்று கூறும். அது நல்லறங்கள் புரியாததாக இருக்குமானால் கை சேதமே! என்னை எங்கு கொண்டு செல்கின்றீhகள்! என்று கூறும். இவ்வாறு கூறும் சப்தத்தை மனிதர்களைத் தவிர அனைத்தும் செவியுறும். மனிதன் அதைச் செவியுற்றால் மயங்கி விழுந்து விடுவான் '.
(அபூ ஸயிதுல் குத்ரி (ரலி) புகாரி: 1380)

மரணத் தருவாயில் நல்லோரின் நிலை

நல்லவர்கள் மரணிக்கும்போது வானவர்கள் சந்தோஷமான வார்த்தைகளை அவர்களிடம் கூறுவார்கள். அவர்கள் மரியாதையுடன் நடத்தப்படுவார்கள். சொர்க்கம் பரிசாக கிடைக்கப் போகிறது என்ற சுபச் செய்தியை மரணிக்கும் தருவாயில் வானவர்கள் அவர்களிடம கூறுவார்கள். எனவே தனது நிலை என்னவாகுமோ என்ற கவலை நல்லவர்களுக்கு இருக்காது. அவர்கள் நிம்மதியுடனும் சந்தோஷத்துடனும் மண்ணறை வாழ்க்கைக்குள் பிரவேசிப்பார்கள்.

'அமைதியுற்ற உயிரே! திருப்தியோடும் (இறைவனால்) திருப்தி கொள்ளப்பட்டும் உமது இறைவனிடம் செல்வாயாக! எனது அடியார்களில் சேர்ந்துக் கொள்வாயாக! எனது சொர்க்கத்தில் நுழைவாயாக! ' (என்று அல்லாஹ் கூறுவான்)
(அல்குர்ஆன்: 89 : 27)

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'மூமினான ஒரு அடியான் உலகத் தொடர்புகளை துண்டித்து விட்டு மறுமையை எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் போது சூரிய ஒளிக்கொப்பான பிரகாசமான முகத்துடன் வானிலிருந்து சில வானவர்கள் அவனிடம் வருவார்கள். அவர்கள் தங்களுடன் சுவர்க்கத்து துணிகளையும் சுவர்க்கத்து நறுமணத்தையும் வைத்துக் கொண்டு அவனுடைய பார்வைக்கு எட்டும் தூரத்தில் இருப்பார்கள். அப்போது உயிரைக் கைப்பற்றும் வானவர் வந்து அவனருகில் அமருவார். அவனை நோக்கி, நல்ல ஆத்மாவே! நீ இந்த உடலிலிருந்து வெளியேறி அல்லாஹ்வின் மன்னிப்பை நோக்கியும், அவனுடைய பொருத்தத்தை நோக்கியும் செல் ' என்று கூறுவார். தோல் பையிலிருந்து நீர் வழிந்து விடுவது போன்று அந்த ஆத்மா வெளியேறி விடும். அந்த வானவர் அதை எடுத்துச் செல்வார்.

அதனை அவர் எடுத்ததும் அருகிலுள்ள மலக்குகள் உடனே சுவர்க்கத்து துணியிலும், நறுமணத்திலும் அதனை வைத்து விடுவார்கள். அதிலிருந்து கஸ்தூரி வாடை வீசும். அந்த மலக்குகள் அதனை சுமந்தவர்களாக முதலாவது வானத்தை நோக்கி சென்று வானத்தை திறந்து விடுமாறு அதிலுள்ள மலக்குகளிடம் கூறுவார்கள். அம்மலக்குகள் வானத்தை திறந்து அந்த ஆத்மாவை வரவேற்பார்கள். ஒவ்வொரு வானத்திலும் இவ்விதமே நடைபெறும். ஏழாவது வானத்தை கடந்து சென்றதும்இ கண்ணியமிக்க அல்லாஹ் ஆத்மாவை சுமந்து சென்ற மலக்குகளை நோக்கி கூறுவான். எனது இந்த அடியானுடைய செயல்களை இல்லிய்யீனில் பதிவு செய்து விட்டும் பூமியிலுள்ள அவனது உடலில் அவனுடைய ஆத்மாவை சேர்த்து விடுங்கள்;...! ' 
(அறிவிப்பவர்: பரா இப்னு ஆஸிப் (ரலி) அஹ்மத் 17803)

இறைச்சந்திப்பு எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'யார் அல்லாஹ்வை சந்திக்க விரும்புகிறாரோ அவரைச் சந்திக்க அல்லாஹ்வும் விரும்புகின்றான். யார் அல்லாஹ்வைச் சந்திப்பதை வெறுக்கிறாரோ அவரைச் சந்திக்க அல்லாஹ்வும் வெறுக்கிறான் என்று சொன்னார்கள். அப்போது நான் அல்லாஹ்வின் தூதரே! மரணத்தை வெறுப்பதையா? (நீங்கள் சொல்கிறீர்கள்). அவ்வாறாயின் (மனிதர்களாகிய) நாங்கள் அனைவருமே மரணத்தை வெறுக்கத்தானே செய்வோம்? என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 'அதுவல்ல, மாறாக இறை நம்பிக்கையாளருக்கு (மரண வேதனையில்)இறைவன் கருணை புரியவிருப்பதாகவும் அவனைப்பற்றி அல்லாஹ் திருப்தி அடைந்திருப்பதாகவும் அவருக்குச் சொர்க்கத்தை வழங்கவிருப்பதாகவும் நற்செய்தி கூறப்படும். அப்போது அவர் அல்லாஹ்வை சந்திக்க விரும்புவார். அல்லாஹ்வும் அவரைச் சந்திக்க விரும்புவான். இறை மறுப்பாளருக்கு அல்லாஹ் வழங்கவிருக்கும் வேதனை குறித்தும் அல்லாஹ் கோபம் கொண்டிருப்பதும் குறித்து அறிவிக்கப்படும். அப்போது அவர் அல்லாஹ்வை சந்திப்பதை வெறுப்பார். அல்லாஹ்வும் அவரைச் சந்திப்பதை வெறுப்பான் '. 
(ஆயிஷா(ரலி) முஸ்லிம் 5208)

ஆகவே நம்முடைய செயல்களை நாம் தூய்மையாக்கி கொண்டு மரணத்தை அதிகம் அதிகம் நினைத்து இறைவனை சந்திப்பதை விரும்பக்கூடிய நன்மக்களாக வாழ்ந்து, மரணிக்க பிரார்த்திப்போம். நமக்கு இறுதி நேரம் வருவதற்கு முன் நம்முடைய நம்பிக்கைகளையும், செயல்களையும் குர்ஆன், நபிவழியின் அடிப்படையில் சீர்திருத்திக் கொள்;வோம்.



மரணம்


 

மரணம் இறைபடைப்பில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. மரணத்திலிருந்து எந்த மனிதரும் தப்பிக்க இயலாது. 

கண்ணியமிக்க அல்லாஹ் கூறுகிறான்.
 
'ஒவ்வொரு ஆன்மாவும் மரணத்தைச் சுவைக்கக்கூடியதே...! ' 
(அல்குர்ஆன் -(சூரத்துல் அன்பியா)21:35)

மற்றுமோர் இடத்தில்
 
'ஒவ்வோர் சமூகத்துக்கும் (குறிப்பிட்டதொரு) தவணையுண்டு. அவர்களது தவணை வந்துவிட்டால் ஒரு நாழிகையேனும் பிந்தவும் மாட்டார்கள், முந்தவும் மாட்டார்கள் '.
 (அல்குர்ஆன் - (சூரத்துல் யூனுஸ்) 10:49)
 
கண்ணியமிக்க அல்லாஹ் கூறுகின்றான்: '

'ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் ஒரு காலக்கெடு உண்டு, அவர்களுடைய கெடு வந்துவிட்டால் அவர்கள் ஒருகணப் பொழுதேனும் பிந்தவும் மாட்டார்கள்; முந்தவும் மாட்டார்கள்'
(அல்குர்ஆன் (சூரத்துல் அஃராஃப்) 7:34)

நவீன தொழிநுட்பங்களைப்பயன்படுத்தி எவ்வளவு பாதுகாப்பு முறைகளைக் கையாண்டு அமைக்கப்பட்ட கட்டிடங்களில் நாம் இருந்தாலும் மரணம் நிச்சயம்.

கண்ணியமிக்க அல்லாஹ் கூறுகிறான்.
 
'நீங்கள் எங்கிருந்தபோதிலும் மரணம் உங்களை அடைந்தே தீரும். (அது) மிகப்பலமாகக் கட்டப்பட்ட கோட்டை (கொத்தளங்)களில் நீங்கள் இருந்தாலும் சரியே! ' 
(அல்குர்ஆன் - (சூரத்துன்னிஸா) 4:78)

அல்லாஹ்வின் தூதர் நபீ (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

'(முறையற்ற) ஆசைகளைத் தகர்க்கக் கூடிய மரணத்தை அதிகமாக நினைவு கூறுங்கள் '.
 (அறிவிப்பவர்: அபூஹூரைரா(ரலி) ஆதாரம்: திர்மிதி 2229)

அல்லாஹ்வின் தூதர் நபீ (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

'ஐந்து நிலைமைகள் ஏற்படுவதற்கு முன் (நற்காரியங்கள் செய்வதற்காக) ஐந்து நிலைமைகளைப் பேணிக்கொள்ளுங்கள். 


1. மரணத்திற்கு முன் வாழ்வையும், 
2. நோய்வருமுன் ஆரோக்கியத்தையும், 
3. பணிச்சுமை வருமுன் ஓய்வையும், 
4. வயோதிகத்திற்கு முன் வாலிபத்தையும், 
5. ஏழ்மைக்கு முன் செல்வ நிலையையும் பேணிக்கொள்ளுங்கள் '.
(ஆதாரம் : ஹாகிம்)

எனவே நிரந்தரமற்ற இவ்வுலக வாழ்க்கை என்பது ஒரு சோதனை என்பதை நாம் உணர்ந்து அழியக்கூடிய பொருள்களின் மீது பேராசைக் கொள்வதை விட்டு விட்டு நிரந்தரமான மறுமை வாழ்விற்கு தேவையான நல்லறங்களின் மீது நாட்டம் கொண்டவர்களாக அதிகமதிகம் நற்காரியங்களைச் செய்வோமாக! வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் அதற்கு அருள் புரிவானாக.




இஸ்லாமிய இல்லம்!



வீடு மனித வாழ்வில் அத்தியாவசியத் தேவைகளுள் ஒன்றாகும். இறை நம்பிக்கை கொண்ட ஒவ்வொருவரின் வீடும் இஸ்லாமிய மயப்படுத்தப்படுவது அவசியமாகும்.

வீடு அமைதியின் அடித்தளம்:

உங்கள் வீடுகளில் உங்களுக்கு அல்லாஹ் அமைதியை ஏற்படுத்தினான். நீங்கள் பிரயாணத்தில் இருக்கும் போதும், தங்கியிருக்கும் போதும் இலகுவாக நீங்கள் எடுத்துச் செல்லக்கூடிய கூடாரங்களை கால்நடைகளின் தோல்களிலிருந்து அவனே உங்களுக்கு ஏற்படுத்தினான். செம்மறி ஆட்டின் உரோமங்கள், ஒட்டகத்தின் உரோமங்கள், வெள்ளாட்டின் உரோமங்கள் ஆகியவற்றிலிருந்து பொருட்களையும், குறிப்பிட்ட காலம் வசதி வாய்ப்புக்களையும் (ஏற்படுத்தினான்.)'
(உலகப் பொதுவேதம் அல்-குர்ஆன் 16:80)

வீடு என்பது மனிதனுக்கு மட்டுமல்ல எல்லா உயிரினங்களுக்கும் அமைதியையும், பாதுகாப்பையும், சுதந்திரத்தையும் வழங்கும் இடமாக இருப்பதைத் மேற்படி இறைவசனம் தெளிவுபடுத்துகின்றது.

உயிருள்ள வீடுகள்:

அல்லாஹ்வை நினைவுகூறப்படும் வீட்டுக்கும், அல்லாஹ்வை நினைவுகூறப்படாத வீட்டுக்குமான உதாரணம்: உயிருள்ளவனுக்கும், செத்த பிணத்துக்கும் ஒப்பானதாகும்!' என நபீ(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(முஸ்லிம் 221, 1859, இப்னு ஹிப்பான் 854)

அல்லாஹ்வை நினைவுகூறப்படாத வீடு செத்த பிணத்துக்கு ஒப்பாக்க மேற்படி ஹதீஸில் கூறப்பட்டுள்ளது. எனவே உங்கள் வீட்டை உயிருள்ளதாக மாற்றுவோம்! 

அல்லாஹ்வை நினைவுகூறப்படுவதன் மூலம் நம்முடைய வீடுகளை உயிரோட்டமுள்ளதாகவும், மன ஆறுதலை வழங்கும் இடமாகவும் ஆக்கிக் கொள்வோம்.;

வீடு ஒரு கேடயம்:

யார் தனது நாவைக் கட்டுப்படுத்தித் தனது வீட்டிலேயே தங்கி விடுகின்றாரோ அவரும், யார் தனது தவறுகளை நினைத்து அழுகின்றாரோ அவரும் நற்செய்தி பெறட்டும்!' என நபீ(ஸல்)  அவர்கள் கூறினார்கள்.
(தப்ரானீ 212)

தனது வீட்டில் ஒருவர் அமர்ந்து அதனால் அவரது பிரச்சினையிலிருந்து மக்களும், மக்களது பிரச்சினையிலிருந்து அவரும் பாதுகாப்புப் பெறுகின்றனரோ அத்தகைய மனிதர் அல்லாஹ்வின் பொறுப்பில் இருக்கின்றார்!' என நபீ(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அஹ்மத் 22093, தபரானீ 16485)

பெரிய அளவில் வெளிப்படும் குழப்பகாலத்தி;ன் போது ஒருவர் தனது வீட்டிலேயே தங்கி விடுவதே அதன் பாதிப்பிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்கான வழியாகும் என்பதை இந்த ஹதீஸ்கள்  வலியுறுத்துகின்றன. அந்த வகையில் வீடு ஒரு கேடயமாகவும் பயன்படும்.