Wednesday, 15 February 2012

இஸ்லாமிய இல்லம்!



வீடு மனித வாழ்வில் அத்தியாவசியத் தேவைகளுள் ஒன்றாகும். இறை நம்பிக்கை கொண்ட ஒவ்வொருவரின் வீடும் இஸ்லாமிய மயப்படுத்தப்படுவது அவசியமாகும்.

வீடு அமைதியின் அடித்தளம்:

உங்கள் வீடுகளில் உங்களுக்கு அல்லாஹ் அமைதியை ஏற்படுத்தினான். நீங்கள் பிரயாணத்தில் இருக்கும் போதும், தங்கியிருக்கும் போதும் இலகுவாக நீங்கள் எடுத்துச் செல்லக்கூடிய கூடாரங்களை கால்நடைகளின் தோல்களிலிருந்து அவனே உங்களுக்கு ஏற்படுத்தினான். செம்மறி ஆட்டின் உரோமங்கள், ஒட்டகத்தின் உரோமங்கள், வெள்ளாட்டின் உரோமங்கள் ஆகியவற்றிலிருந்து பொருட்களையும், குறிப்பிட்ட காலம் வசதி வாய்ப்புக்களையும் (ஏற்படுத்தினான்.)'
(உலகப் பொதுவேதம் அல்-குர்ஆன் 16:80)

வீடு என்பது மனிதனுக்கு மட்டுமல்ல எல்லா உயிரினங்களுக்கும் அமைதியையும், பாதுகாப்பையும், சுதந்திரத்தையும் வழங்கும் இடமாக இருப்பதைத் மேற்படி இறைவசனம் தெளிவுபடுத்துகின்றது.

உயிருள்ள வீடுகள்:

அல்லாஹ்வை நினைவுகூறப்படும் வீட்டுக்கும், அல்லாஹ்வை நினைவுகூறப்படாத வீட்டுக்குமான உதாரணம்: உயிருள்ளவனுக்கும், செத்த பிணத்துக்கும் ஒப்பானதாகும்!' என நபீ(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(முஸ்லிம் 221, 1859, இப்னு ஹிப்பான் 854)

அல்லாஹ்வை நினைவுகூறப்படாத வீடு செத்த பிணத்துக்கு ஒப்பாக்க மேற்படி ஹதீஸில் கூறப்பட்டுள்ளது. எனவே உங்கள் வீட்டை உயிருள்ளதாக மாற்றுவோம்! 

அல்லாஹ்வை நினைவுகூறப்படுவதன் மூலம் நம்முடைய வீடுகளை உயிரோட்டமுள்ளதாகவும், மன ஆறுதலை வழங்கும் இடமாகவும் ஆக்கிக் கொள்வோம்.;

வீடு ஒரு கேடயம்:

யார் தனது நாவைக் கட்டுப்படுத்தித் தனது வீட்டிலேயே தங்கி விடுகின்றாரோ அவரும், யார் தனது தவறுகளை நினைத்து அழுகின்றாரோ அவரும் நற்செய்தி பெறட்டும்!' என நபீ(ஸல்)  அவர்கள் கூறினார்கள்.
(தப்ரானீ 212)

தனது வீட்டில் ஒருவர் அமர்ந்து அதனால் அவரது பிரச்சினையிலிருந்து மக்களும், மக்களது பிரச்சினையிலிருந்து அவரும் பாதுகாப்புப் பெறுகின்றனரோ அத்தகைய மனிதர் அல்லாஹ்வின் பொறுப்பில் இருக்கின்றார்!' என நபீ(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அஹ்மத் 22093, தபரானீ 16485)

பெரிய அளவில் வெளிப்படும் குழப்பகாலத்தி;ன் போது ஒருவர் தனது வீட்டிலேயே தங்கி விடுவதே அதன் பாதிப்பிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்கான வழியாகும் என்பதை இந்த ஹதீஸ்கள்  வலியுறுத்துகின்றன. அந்த வகையில் வீடு ஒரு கேடயமாகவும் பயன்படும்.

No comments:

Post a Comment