Monday 4 April 2011

கடன்

கடன் கொடுக்கல் /  வாங்கல் பற்றி அல்குர்ஆனும், நபிமொழிகளும் என்ன சொல்கின்றன என ஆராய்வோம்.


கடன் வாங்கியவர் நடந்து கொள்ள வேண்டிய நடைமுறைகளையும்,
கடன் கொடுத்தவர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றியும் இஸ்லாம் தெளிவுபடுத்தியுள்ளது.

கடன் வாங்கியவர் தான் பெற்ற கடனை எவ்வளவு விரைவாகச் செலுத்த முடியுமோ அவ்வளவு விரைவாகச் செலுத்தி விட வேண்டும். வாங்கி ய கடனை வசதி வாய்ப்பு வந்ததும் உடனே நிறைவேற்றிட முயற்சிக்க வேண்டும்.

வசதியுள்ளவர் (தனது கடனை அடைக்காமல் கடன் கொடுத்தவிரிடம் தவணை சொல்லி)தள்ளிப் போடுவது அநியாயமாகும். என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார். (ஆதாரம் புகாரீ 2400, முஸ்லிம் 1564, அபூதாவூத் 3345, திர்மிதி 1308, நஸயீ 4705, இப்னுமாஜா 2404, அஹ்மத், முஅத்தா)


யார் மக்களின் பணத்தை (அல்லது பொருட்களைத்) திருப்பிச் செலுத்தும் எண்ணத்துடன் கடன் வாங்குகிறாரோ அவர் சார்பாக அல்லாஹ்iவே அதனைத் திருப்பிச் செலுத்துவான்.

யார் திருப்பிச் செலுத்தும் எண்ணமின்றி அதை (ஏமாற்றி) அழித்து விடும் எண்ணத்துடன் கடன் வாங்குகிறாரோ அவரை அல்லாஹ்வும் அழித்து விடுவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார். (ஆதாரம் : புகாரீ 2387)


நான் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தேன். அவர்கள் உஹது மலையைப் பார்த்த போது இந்த மலை எனக்காகத் தங்கமாக மாற்றப்பட்டு அதிலிருந்து ஒரேயொரு தங்க நாணயம் கூட என்னிடம் மூன்று நாட்களுக்கு மேல் தங்கியிருப்பதை நான் விரும்ப மாட்டேன். கடனை அடைப்பதற்காக நான் எடுத்து வைக்கின்ற தங்க நாணயத்தைத் தவிர என்று கூறினார்கள் என அபூதர் (ரலி) அறிவிக்கிறார். (ஆதாரம் : புகாரீ 2388, 6444, முஸ்லிம் 991)

மேற்கண்ட நபி மொழிகள் கடனை உடனே அடைத்து விட வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றன.


இஸ்ரவேலர்களில் ஒருவர் மற்றொருவரிடம் தமக்கு ஆயிரம் தங்கக் காசுகள்கடனாகக் கேட்டார். அவர் சாட்சிகளைக் கொண்டு வா! அவர்களை சாட்சியாக வைத்துத் தருகிறேன் என்றார். கடன் கேட்டவர் சாடசிக்கு அல்லாஹ்வே போதுமானவன்! என்றார். அப்படியானால் ஒரு பிணையாளியை என்னிடம் கொண்டு வா! என்று அவர் கூறினார். அதற்குக் கடன் கேட்டவர், பிணை நிறக் அல்லாஹ்வே போதுமானவன் என்று கூறினார். அதற்கு கடன் கேட்கப்பட்டவர், நீர் கூறியது உண்மையே! என்று கூறி, குறிப்பிட்ட தவணைக்குள் திருப்பித் தர வேண்டும் என்று ஆயிரம் தங்கக் காசுகளை அவருக்குக் கொடுத்தார். கடன் வாங்கியவர் கடல் மார்க்கமாகப் புறப்பட்டு தமது வேலைகளை முடித்துக் கொண்டு, குறிப்பிட்ட தவணை யில் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும் எனபதற்காக வாகனத்தைத் தேடினார். எந்த வாகனமும் கிடைக்கவில்லை. உடனே, ஒரு மரக்கட்டையை எடுத்து அதைக் குடைந்து அதற்குள் ஆயிரம் தங்கக் காசுகளையும் கடன் கொடுத்தவருக்கு ஒரு கடிதத்தையும் உள்ளே வைத்து அடைத்தார். பிறகு கடலுக்கு வந்து இறைவா! இன்னாரிடம் நான் ஆயிரம் தங்கக் காசுகளைக் கடனாகக் கேட்டேன். அவர் பிணையாளி வேண்டுமென்றார், நான் அல்லாஹ்வே பிணை நிற்கப் போதுமானவன்! என்றேன். அவர் உன்னைப் பிணையாளியாக ஏற்றுக் கொண்டார். என்னிடம் சாட்சியைக் கொண்டு வரும்படிக் கேட்டார். சாட்சிக்கு அல்லாஹ்வே போதுமானவன்! என்று கூறினேன். அவர் உன்னை சாட்சியாக ஏற்றுக் கொண்டார். பின்னர் அவருக்குரிய (பணத்)தை அவரிடம் கொடுத்து அனுப்பி விடுவதற்காக ஒரு வாகனத்திற்கு முயற்சி செய்தேன் அது கிடைக்கவில்லை என்பதை நீ அறிவாய்! எனவே, இதை உரியவரிடம் சேர்ப்பிக்கும் பொறுப்பை உன்னிடத்தில் ஒப்படைக்கிறேன்! என்ற கூறி அதைக் கடலில் வீசினார். அது கடலுக்குள் சென்றதும் திரும்பி விட்டார். அத்துடன் தமது ஊறுக்குச் செல்வதற்காக வாகனத்தை அவர் தேடிக் கொண்டிருந்தார். அவருக்குக் கடன் கொடுத்த மனிதர், தமது செல்வத்துடன் ஏதேனும் வாகனம் வரக் கூடும் என்று நோட்டமிட்ட வண்ணம் புறப்பட்டார். அப்போது தங்கக் காசு அடங்கிய அந்த மரக்கட்டையைக் கண்டார். (அவருக்கு அதில் தங்கக் காசு இருப்பது பற்றி ஏதும் தெரியாது (தமது குடும்பத்திற்க விறகாகப் பயன்படட்டும் என்பதற்காக அதை எடுத்தார் அதைப் பிளந்து பார்த்த போது தங்கக் காசுகளையும் கடிதத்தையும் கண்டார். பிறகு கடன் வாங்கியவர் ஆயிரம் தங்கக் காசுகளை எடுத்துக் கொண்டு இவரிடம் வந்து சேர்ந்தார். அல்லாஹ்வின் மீது ஆணையாக! உமது பணத்தை உமக்குத் திருப்பித் தருவதற்காக வாகனம் தேடும் முயற்சியில் நான் ஈடுபட்டிருந்தேன். இப்போது தான் வாகனம் கிடைத்து வந்திருக்கிறேன்! என்று கூறினார். அதற்குக் கடன் கொடுத்தவர், எனக்கு எதையாவது அனுப்பி வைத்தீரா? என்று கேட்டார். கடன் வாங்கியவர், வாகனம் கிடைக்காமல் இப்போது தான் வந்துள்ளேன் என்று உமக்குத் நான் தெரிவித்தேன்! என்று கூறினார். கடன் கொடுத்தவர், நீர் மரத்தில் வைத்துப் பணம் அனுப்பியதை உம் சார்பாக அல்லாஹ் என்னிடம் சேர்ப்பித்து விட்டான். எனவே, ஆயிரம் தங்கக் காசுகளை எடுத்துக் கொண்டு (சரியான) வழியறிந்து செல்வீராக! என்ற கூறினார்.
இதை அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார். (ஆதாரம் : புகாரீ 2291)


இந்த நபிமொழி கடன் பெற்றவர் எவ்வளவு நாணயமாக நடந்து கொண்டார் என்று அறிவிக்கிறது.
மார்க்கப் போரில் உயிர் நீத்த உயிர்த்தியாகிக்குக் கடன் தவிர மற்றெல்லாப் பாவங்களையும் அல்லாஹ் மன்னித்து விடுகிறான். இந்த விஷயத்தை எனக்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள் கூறினார்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லா பின் அம்ருபின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஆதாரம் திர்மிதீ2640, 1886, 1712, அஹ்மத், முஸ்லிம் 4860, நஸயீ 3156)


மார்க்கப் போரில் உயிர் நீத்த உயிர்த்தியாகி கேள்வி, கணக்கு ஏதுமின்றி சுவர்க்கம் செல்வார் என்றிருக்க அவருக்கு கடன் இருக்குமானால் அது மன்னிக்கப்பட மாட்டாது. ஏனெனில் அது பிறரது உரிமை ஆகும்.


தொழுகை நடத்துவதற்காக ஒரு ஜனாஸா கொண்டு வரப்பட்டது. இவர் கடனாளியா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்ட போது, நபித்தோழர்கள் இல்லை என்றனர். அவருக்கு நபி (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள். பின்னர் மற்றொரு ஜனாஸா கொண்டு வரப்பட்ட போது இவர் கடனாளியா? என்ற நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நபித் தோழர்கள் ஆம் என்றனர். நபி (ஸல்) அவர்கள் அப்படியென்றால் உங்கள் தோழருக்கு நீங்களே தொழுகை நடத்துங்கள்! என்றார்கள். அப்போது அபூகதாதா (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! இவரது கடனுக்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்! என்று கூறியதும் அந்த ஜனாஸாவுக்கு நபி (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள் என ஸலமா பின் அக்வஃ (ரலி) அறிவிக்கின்றார்கள். (ஆதாரம் : புகாரீ 2285)


எனவே இறந்தவருக்கு கடன் இருந்தால் அதைத்தான் முதலில் நிறைவேற்ற வேண்டும். ஏனெனில் அது அவரை சொர்க்கம் செல்வதை விட்டும் தடுத்து விடும் அல்லது இறந்தவருக்குக் கடன் கொடுத்தவர் விரும்பினால் அந்தக் கடனைத் திரும்பப் பெறாமல் மன்னித்து விடலாம். அல்லது அச்சமூகத்திலுள்ள செல்வந்தர் யாராவது அக்கடனுக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்பதை மேற்கண்ட ஹதீஸ் உணர்த்துகிறது.


கடனை நல்ல முறையில் திருப்பிச் செலுத்த வேண்டும் என்றும் இஸ்லாம் குறிப்பிடுகிறது. ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதரிடம், அவர்களுக்குத் தான் கொடுத்த ஒட்டகத்தைத் திருப்பித் தரும்படிக் கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்களிடம் அந்த மனிதர் கடுமையாகப் பேசினார். ஆகவே, நபித்தோழர்கள் அவரைத் தண்டிக்க விரும்பினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களை நோக்கி, அவரைத் தண்டிக்க வேண்டாம், விட்டு விடுங்கள். ஏனெனில் ஒருவர் தனக்குக் கடன் தர வேண்டியவரிடம் கடுமையாகப் பேச உரிமையுண்டு அவருக்காக ஓர் ஒட்டகத்தை வாங்கி அவரிடம் கொடுத்து விடுங்கள் என்று கூறினார்கள்.


நபித்தோழர்கள் அவருக்குத் தர வேண்டிய ஒட்டகத்தின் வயதை விட அதிக வயதை உடை ஒட்டகம் தான் எங்களிடம் இருக்கிறது என்று கூறினார்கள். அதற்கு றபி (ஸல்) அவர்கள், அதையே வாங்கி அவருக்குக் கொடுத்து விடுங்கள். ஏனெனில் உங்களில் எவர் நல்ல முறையில் கடனைத் திருப்பிச் செலுத்துகின்றாரோ அவரே உங்களில் சிறந்தவர் என்று கூறினார்கள் என அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார். (ஆதாரம் : புகாரீ 2390)


எனவே கடன் வாங்கியவர் தான் செலுத்த வேண்டிய கடனை உடனே நிறைவேற்றுவதுடன் முடிந்தால் அதை நல்ல முறையிலும் நிறiவேற்ற வேண்டும் என அறியலாம்.

No comments:

Post a Comment