Saturday 9 April 2011

உடை உடுத்தும் ஒழுங்குமுறைகள்

அல்லாஹ் கூறுகிறான் :

ஆதமுடைய மக்களே! மெய்யாகவே, நாம் உங்களுக்கு உங்களுடைய மானத்தை மறைக்கவும் உங்களுக்கு அலங்காரமாகவும், ஆடையை அளித்துள்ளோம். ஆயினும் தக்வா (பயபக்தி) எனும் ஆடையே மேலானது.
(உலகப் பொது மறை அல்-குர்ஆன் 7;26)


இன்னும் அல்லாஹ் தான் வெப்பத்திலிருந்து உங்களைப் பாதுகாக்கக் கூடிய சட்டைகளையும் போரில் உங்களைப் பாதுகாக்கக் கூடிய கவசங்களையும் உங்களுக்காக அமைத்தான்.
(உலகப் பொது மறை அல்-குர்ஆன் 16;81)

ஆண்களின் ஆடைகள்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் யாரும் தனது தோள்புஜத்தின் மீது எந்த ஆடையும் இல்லாமல் ஒரேயொரு ஆடையில் தொழக் கூடாது.
 (ஆதாரம் : புகாரி 359, முஸ்லிம் 516, அஹ்மத், நஸயீ, அபூதாவூத் 626)


எனவே தோள்புஜங்களை மறைக்காமல் பனியன் போட்டுத் தொழுதால் தொழுகை கூடாது. ஆனால், தோள்புஜங்களை மறைக்கும் விதமாக உள்ள பனியன் அல்லது அரைக் கை சட்டை, துண்டு போன்றவற்றை அணித்து தொழுதால் தொகைகூடும்.


ஆடையின் வலக்கை பகுதியை வலக்கையில் கீழால் எடுத்து இடது தோளிலும், இடது கைப்பகுதியை வலது தோளிலும் போட்டு கொண்டு ஒரேயோரு ஆடையில் நபி (ஸல்) அவர்கள் தொழுதார்கள் என ஜபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(ஆதாரம்: புகாரி 353).


தோள் புஜங்களை மறைக்கப் போதுமான ஆடை இல்லாவிட்டால்...?

'நீ ஒரேயொரு ஆடை அணிந்து தொழும்போது அது விசாலமானதாக இருந்தால் அதன் வலக்கைப் பகுதியை இடது தோளிலும், இடது பகுதியை வலது தோளிலும் போட்டுக் கொண்டு தொழு. அது சிறியதாக இருந்தால் அதைக் கைலியாகக் கட்டிக் கொண்டு மேலாடை ஏதுமின்றித் தொழு என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(ஆதாரம் : புகாரி 361, முஸ்லிம் 518, அஹ்மத்)


சிலர் தங்களுடைய வேஷ்டிகளை அவர்களின் தோள்களில் முடிச்சுப் போட்டுக் கொண்டவர்களாக நபி (ஸல்) அவர்களுடன் தொழுதனர் என ஸஹ்ல் (ரலி) கூறுகிறார்கள்.

ஜாபிர் (ரலி) ஒரே வேஷ்டியை அணிந்து கொண்டு அதைத் தமது பிடரியில் முடிச்சுப் போட்டுக் கொண்டவர்களாகத் தொழுதார்கள். அவர்களது இதர ஆடைகளோ துணிதொங்க விடப்படும் கம்பில் தொங்கிக் கொண்டிருந்தன. இவர்களிடத்தில் ஒருவர், 'ஒரே வேஷ்டியிலா தொழுகிறீர்கள்?' என்று கேட்டார் அதற்கு 'உன்னைப் போன்ற மடையர்கள் என்னைப் பார்க்க வேண்டுமென்பதற்காகவே இவ்வாறு நான் செய்தேன். நபி (ஸல்) அவர்களுடைய காலத்தில் எங்களில் யாருக்குத்தான் இரு ஆடைகள் இருந்தன? என்று ஜாபிர் (ரலி) வினவினார்கள்.
(ஆதாரம் : புகாரி 352)


எந்த நிற ஆடைகள் அணியலாம்?

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்கள் ஆடைகளிலேயே சிறந்தது வெண்மையான ஆடைகளாகும். எனவே வெண்மையான ஆடைகளையே அணியுங்கள். உங்களில் மரணமானவர்களுக்கும் வெண்மையான ஆடைகளைக் கொண்டு கஃபனிடுங்கள்.
(ஆதாரம் : திர்மிதீ 994, அபூதாவூத் 3878)


'நபி (ஸல்) அவர்கள் அதிகக் குட்டையாக இல்லாமல் நடுத்தர உயரம் உடையவர்கள் அவர்களை நான் சிவப்பு நிற ஆடையில் கண்டேன். அதில் அவர்களை விட அதிக அழகான எதையும் நான் என்றும் கண்டதேயில்லை' என பராஉ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(ஆதாரம் : புகாரி 5848, முஸ்லிம் 2337, திர்மிதீ 1724, அபூதாவூத் 4072)


'நபி (ஸல்) அவர்கள் இரு பச்சை நிற ஆடைகளை உடுத்தியிருக்கக் கண்டேன்' என அபீ ரிம்ஸத ரிஃபாஆ தைமிய்யி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
(ஆதாரம்: அபூதாவூத் 4065, திர்மிதீ 2813, நஸயீ)


நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது (மக்காவில்) நுழைந்தார்கள். அப்போது அவர்கள் கருப்புத் தலைப்பாகை அணிந்திருந்தார்கள்.
(ஆதாரம் : முஸ்லிம் 1358)


வெண்மையானதும் எமன் நாட்டின் ஸஹுல் என்ற பகுதியை சேர்ந்ததுமான மூன்று பருத்தி ஆடைகளால் நபி (ஸல்) அவர்கள் கஃபனிடப்பட்டார்கள். அவற்றில் மேல் சட்டையும் தலைப்பாகையும் இல்லை' என அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(ஆதாரம் : புகாரி 1273, முஸ்லிம் 941, அஹ்மது)

காவி நிற ஆடைகளை அணிய இஸ்லாம் தடை விதித்துள்ளது.

என் மீது இரு காவி நிற ஆடைகளைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், 'இவை கஃபிர்களின் ஆடைகள். இவற்றை அணிய வேண்டாம் என்று கூறினார்கள் என அப்துல்லாஹிப்னு அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
 (ஆதாரம் : முஸ்லிம், அஹ்மத், நஸயீ)

மேற்கண்ட நபிமொழிகளிலிருந்து காவி நிற ஆடைகள் தவிர மற்ற ஆடைகளை அணியலாம் என அறிய முடிகிறது எனினும் வெண்மையான ஆடைகள் சிறந்தவை.


தங்கமும் பட்டாடைகள் அணிவதும் ஆண்களுக்கு ஹராம்.


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தங்கமும், பட்டும் எனது சமுதாயப் பெண்களுக்கு ஹலால் ஆக்கப்பட்டுள்ளது. ஆண்களுக்கு ஹராமாக்கப் பட்டுள்ளது.
(ஆதாரம்: அஹ்மத், நஸயீ, திர்மிதி 1720, அபூதாவூத் 4057)


பேண்ட் அணியலாமா?


'யூத, கிறிஸ்தவர்கள் பேண்ட் அணிகிறார்கள்; கைலி அணிவதில்லை' என்று நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் கூறினோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள் 'நீங்கள் பேண்ட்டும் அணியுங்கள், கைலியும் அணியுங்கள், யூத, கிறிஸ்தவர்களுக்கு மாறு செய்யுங்கள் என்று கூறினார்கள் என அபூ உமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
(ஆதாரம் : அஹ்மத்)

ஆடை அணியும் முறை


இரு கரண்டைக் காலுக்குக் கீழே தொங்கும் கீழாடை(யை அணிகின்றவர்) நரகத்தில் (புகுவார்)என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
(ஆதாரம் : புகாரி 5787, நஸயீ)


எனது கீழாடை கரண்டைக் காலுக்கும் கீழே தொய்வாக இருக்குமாறு உடுத்திவந்தேன். அதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், 'அப்துல்லாவே! உமது கீழாடையை உயர்த்துவீராக!' என்றார்கள். நான் சிறிது உயர்த்தினேன். பின்னர் நபி (ஸல்) அவர்கள். 'இன்னும் உயர்த்தி உடுப்பீராக!' என்றார்கள். நான் இன்னும் சிறிது உயர்த்தினேன். அன்றிலிருந்து அப்படியே உடுத்திவருகிறேன் என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூற, அப்போது அங்கிருந்த சிலர், எவ்வளவு உயர்த்தி உடுக்கிறீர்கள்?' என்று கேட்டார்கள். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள். 'முழங்காலில் பாதி வரை' என்று கூறினார்கள்.
(ஆதாரம் : முஸ்லிம் 2086)


'மறுமை நாளில் முன்று பேருடன் அல்லாஹ் பேசமாட்டான்.

அவர்களை(முன்று பேருடன் ) ஏறெடுத்தும் பார்க்க மாட்டான் அவர்களுக்குக் கடுமையான தண்டனைகளும் உண்டு என நபி (ஸல்) அவர்கள் மும்முறை கூறினார்கள்.  'அவர்கள் மிகப் பெரும் நஷ்டவாளிகள்: தண்டனைக் குரியவர்கள், அப்போது அபூதர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் யார்? எனக்கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், கீழாடையை கரண்டைக் காலுக்கும் கீழே இறக்கி உடுத்தியவர், செய்த உபகாரத்தைச் சொல்லிக் காட்டியவர், பொய்ச்சத்தியம் செய்து பொருளை விற்றவர் எனக் கூறினார்கள்.
 (ஆதாரம் : முஸ்லிம் 106)

நபி (ஸல்) அவர்கள் சட்டை அணிந்தால் வலப் பக்கத்தை முதலில் அணிவார்கள்.
 (ஆதாரம் திர்மிதி)

'உங்களில் ஒருவர் காலணிகளை அணிந்தால் வலது காலணியை முதலில் அணியட்டும், கழற்றும் போது இடது காலணியை முதலில் கழற்றட்டும்' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(ஆதாரம் : புகாரி 5855, முஸ்லிம் 2097)


நீங்கள் ஒரேயொரு காலணியில் நடக்க வேண்டாம். ஒன்று இரு காலணிகளையும் ஒரு சேரக் கழற்றி விடுங்கள், அல்லது இரண்டையும் ஒரு சேர அணிந்து கொள்ளுங்கள்.
(ஆதாரம் : புகாரி 5856)

நபி (ஸல்) அவர்கள் புதிய ஆடை அணிந்தால், தலைப்பாகை அல்லது சட்டை அல்லது வேட்டி என்று அதன் பெயரைக் குறிப்பிட்டு (அல்லாஹும்ம லகல் ஹம்து அன்த கஸவ்த்தனீஹி அஸ் அலுக்க கைரஹுவகைர மாஸுனிஅ லஹு வஅவூது பிக்க மின்ஷர்ரிஹி வஷ்ர்ரி மா ஸுனிஅ லஹு) என்று கூறுவார்கள்.
 (ஆதாரம் : அபூதாவூத் 4020, திர்மிதி 1767)


ஒருவர் ஆடை அணியும் போது 'அல்ஹம்து லில்லாஹில்லதீ கஸானீ ஹாதா வரஸகனீஹி மின் கைரி ஹவ்லிம் மின்னீ வலா குவ்வாஹ் (என் சக்தி, வல்லமை, ஆற்றல் ஏதுமின்றி எனக்கு இந்த ஆடையை அணியச் செய்த அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்!)' என்று கூறினால் அவரது முன்பின் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(ஆதாரம் : அபூதாவூது)


'பெருமையின் காரணமாகத் தனது ஆடையைத் தரையில் இழுபட யார் உடுக்கிறாரோ அவரை அல்லாஹ் மறுமை நாளில் ஏறெடுத்தும் பார்க்கமாட்டான்' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் அப்போது அல்லாஹ்வின் தூதரே! நான் கவனமாக இல்லாவிட்டால் எனது கீழாடையின் இரு பக்கங்களில் ஒன்று கீழே இறங்கிக் கொண்டே இருக்கிறது' என்று அபூபக்கர் (ரலி) அவர்கள் கூற, 'நீர் பெருமையாக உடுப்பவரில் உள்ளவர் அல்லர்' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
 (ஆதாரம் : புகாரி 3665, 5784,முஸ்லிம் 2085, அபூதாவூது 4085)


இடுப்பில் இறுக்கமாக ஆடை நிற்காமல் வழுக்கிக் கொண்டே கீழிறங்கினால், அல்லது உடலின் அமைப்பு அவ்வாறு இருந்தால் அல்லது காலில் காயம் போன்ற காரணத்தால் ஈ, கொசு போன்றவை மொய்க்காமல் தடுக்க கீழாடையை இறக்கி உடுத்தினால் குற்றமில்லை. பெண்கள் கால்பாதங்கள் மறைக்கும் படியாக கரண்டைக் காலுக்குக் கீழே தான் ஆடை உடுத்த வேண்டும். அதுவும் குற்றமன்று, ஆண்கள் தற்பெருமை, அகம்பாவம் கொண்டு தரையில் படும்படி உடை உடுத்துவது தான் குற்றமாகும். மேலும் சிலர் பேண்ட் அணியும் போது பெரும்பாலும் கரண்டைக் காலுக்குக் கீழே தான் அணிகின்றனர். அதுவும் மாபெரும் தவறாகும். சில அறிஞர்கள் பேண்ட் போன்றவற்றை அவ்வாறு அணிவது கூடும் என்று கூறுகின்றனர். இதற்கு எந்த ஆதாரமும் இல்லை. பேண்ட்டும் கூட அவ்வாறு அணியக் கூடாது. சிலர் தொழும் போது மட்டும் பேண்ட்டை கரண்டைக் காலுக்கு மேலே மடித்து வைத்து விட்டு தொழுகின்றனர். அதன் பின்பு கீழே இறக்கி விடுகின்றனர். இது தவறாகும். தொழும் போது மட்டுமின்றி எல்லா நேரங்களிலும் கரண்டைக்கு மேலே தான் பேண்ட் இருக்குமாறு அணிய வேண்டும்.

அவரவர் வசதிக்கேற்ப ஆடையணியலாம்.

நான் மட்டரகமான ஆடை உடுத்திக் கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் வந்தேன். அப்போது 'உனக்கு வசதி (செல்வம்) இருக்கிறதா? என்று கேட்டார்கள் நான் 'ஆம்' என்றேன். 'என்னென்ன இருக்கிறது? என்று கேட்டார்கள். 'எல்லாச் செல்வமும் இருக்கிறது ஒட்டகங்கள், ஆடுமாடுகள், குதிரைகள், அடிமைகள் என எல்லாவகைச் செல்வங்களையும் அல்லாஹ் எனக்கு வழங்கிச் சிறப்பித்துள்ளான்' என்று நான் கூறினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் 'அல்லாஹ் உனக்கு வசதி வாய்ப்புகளை வழங்கியிருந்தால் அவன் உனக்கு அளித்துள்ள அருட்கொடையின் அடையாளம் உன் மீது தென்பட வேண்டும்' என்று கூறினார்கள் என் அபுல் அஹ்வஸ் (ரலி) தமது தந்தை மூலம் அறிவிக்கிறார்கள்.
(ஆதாரம்: அஹ்மத், நஸயீ, ஷரஹுஸ் ஸுன்னா)


'கடுகளவு பெருமை உள்ளவனும் சுவர்க்கத்தில் நுழைய முடியாது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியபோது, 'ஒருவர் தனது ஆடை, தனது காலணிகள் அழகாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறாரே, அது பெருமையா?' என்று ஒருவர் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'அல்லாஹ் அழகை விரும்புகிறான்: பெருமை என்பது என்னவெனில் சத்தியத்தை ஏற்க மறுப்பதும் மக்களை இழிவாகக் கருதுவதும் தான்' என்று விளக்கம் அளித்தார்கள்.
(ஆதாரம்: முஸ்லிம், அஹ்மத்)


ஒருவர் அழுக்கான ஆடை அணிந்திருப்பதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், 'இவர் ஆடையைக் கழுவிக் சுத்தமாக்கிக் கொள்ள தண்ணீர் கிடைக்கவில்லையா? என்று கேட்டார்கள்.
 (ஆதாரம் : அபூதாவூது)


பெண்களைப் போன்று ஆடை ஆபரணங்களை அணியும் ஆண்களையும், ஆண்களைப் போன்று ஆடை ஆபரணங்களை அணியும் பெண்களையும் நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள்.
(ஆதாரம் : அபூதாவூது)

மேற்கண்ட நபிமொழிகளிலிருந்து ஆண்களைப் போன்று பெண்கள் ஆடை அணியக் கூடாது என்றும் பெண்களைப் போன்று ஆண்கள் ஆடை அணியக் கூடாது என்றும் அறிந்து கொள்கிறோம். மேலும் வசதி படைத்தவர் தமது வசதிற்கேற்பவும் வசதியற்றவர்கள் தமது சக்திக்கு ஏற்பவும் உடையணியலாம் என அறியமுடிகிறது. வசதியுள்ளவர்கள் தமது வசதிக்கு ஏற்ப ஆடையணியும் வசதியற்றவர்களையும், பேண்ட் அணிந்திருப்பவர்கள் வேஷ்டி, கைலி அணிந்திருப்பவர்களையும் தாழ்வாகக் கருதக் கூடாது. யாரையும் தாழ்வாகக் கருதும் எண்ணமின்றி அழகான, சுத்தமான, உயர்வான ஆடைகள் அணிவதில் தவறில்லை. இஸ்லாம் உடையணியும் விஷயத்தில் கூட எவ்வளவு அழகான வழிகாட்டியிருக்கிறது என்பதை சிந்தித்து நேர்வழி பெறுக!.

No comments:

Post a Comment