Friday, 4 March 2011

ஷைத்தானுடன் ஒரு உரையாடல்

ஒரு நாள் இரவு நான் ஆழ்ந்த நித்திரையில் இருக்கும் பொழுது பஜ்ர் தொழுகைக்கான  பாங்கொலி கேட்டது.  பள்ளிக்குச் சென்று ஜமாத்தோடு தொழ வேண்டும் என்ற எண்ணத்தில் எழ முற்பட்டேன்.

அப்பொழுது ஷைத்தான் அங்கு வந்தவனாக 'விடிவதற்கு இன்னும் நேரம்
இருக்கிறது. ஒரு குட்டித்தூக்கம் போடு' என்றான்.

'தூங்கினால் ஜமாத்தோடு தொழமுடியாமல் போய்விடுமே' என்றேன்.

அதற்கு ஷைத்தான் 'நான் அதை மறுக்கவில்லை. பகல் முழுவதும் நீ வெயிலில் கஷ்டப்பட்டு உழைத்து களைத்துப் போய் இருக்கிறாய். இந்த இமாமிற்கு என்ன வேலை? நிழலில், பள்ளியின் உள்ளே அமர்ந்து கொண்டு எந்த வேலையும் செய்யாமல் இருக்கிறார்.

தொழ மறந்தால் வீட்டில் தனியாக தொழ அனுமதி இருக்கிறதே! உன்னை வருத்திக் கொள்ளாதே! இஸ்லாமிய மார்க்கம் இலேசானது. அதை கடினமாக்கி விடாதே!' என்றான்.

அவன் பேச்சில் மயங்கி உறங்கி விட்டேன்.

சூரியன் உதயமாகி நன்கு வெளிச்சம் பரவிய பின்பே விழித்தேன்.

அப்பொழுது ஷைத்தான் எதிரில் வந்து 'வருத்தப்படாதே! நன்மை சம்பாதிக்க பல வழிகள் இருக்கிறது' என்றான்.

நான் தௌபா செய்ய நாடினேன்.

உடனே ஷைத்தான் 'உன் இளமைப் பருவம் முடியுமுன் அதை  முழுமையாக அனுபவி' என்றான்.

நான் 'மரணம் வந்து விடுமே என அஞ்சுகிறேன்' என்றேன்.

அதற்கவன் 'பைத்தியம் மாதிரி பேசாதே. உன் வாழ்வு இப்பொழுது
முடிவடையாது' என்றான்
.
நான் அல்லாஹ்வின் ஞாபகத்தில் (திக்ர்) ஆழ்ந்தேன். உடனே அவன் என் உள்ளத்தில் உலகத்தின் பல்வேறு இன்பங்களைப் பற்றிய எண்ணங்களை விதைத்தான்.

நான்  'அல்லாஹ்விடம் துஆ செய்வதை நீ தடுக்கிறாய்' என்றேன்.

'இல்லை, இல்லை. நீ இரவு படுக்கும்முன் துஆ செய்யலாமே' என்றான்.

நான் 'உம்ரா செல்ல நாடியுள்ளேன்' என்றேன்.'நல்லது. ஆனால், சுன்னத்தை விட பர்ளு தானே முக்கியம். நீ உம்ரா செல்லாதே, ஹஜ் செல்ல முயற்சி செய்' என்றான்.

நான் குர்ஆன் ஓத முற்பட்டேன். உடனே அவன் ' நீ ஏன் பாடல், கவிதைகளை பாடி உன்னை சோர்விலிருந்து விடுவிக்க மறுக்கிறாய்?' என்றான்.

நான் 'பாடல் பாடி கூப்பாடு போடுவது ஹராம்' என்றேன்.

உடனே அவன் 'மார்க்க மேதைகளிடையே இசை, பாடல் குறித்து
கருத்து வேற்றுமை உள்ளது' என்றான்.

'இசையை ஹராம் என்று கூறும் ஹதீஸ்களை நான்
படித்துள்ளேன்' என்றேன்.

உடனே அவன் ' அந்த ஹதீஸ்களின் அறிவிப்பாளர்கள் வரிசை
பலஹீனமானது' என்றான்.

அந்த சமயத்தில் ஒரு அழகிய இளமங்கை என்னை கடந்து சென்றாள். நான் என் பார்வையை வேறுபுறம் திருப்பிக் கொண்டேன்

.உடனே அவன் 'என்ன வெட்கப்படுகிறாய்? முதல்
பார்வை தான் அனுமதிக்கப்பட்டுள்ளதே!' என்றான்.

'அந்நியப் பெண்ணை பார்ப்பது நரகில் தள்ளிவிடும் என அஞ்சுகிறேன்' என்றேன்.

அவன் சிரித்து விட்டு 'இயற்கை அழகை கலைக்கண்ணோடு ரசிப்பது அனுமதிக்கட்டது தான் ' என்றான்.

நான் 'தாவா-அழைப்புப்பணி செய்ய நாடியுள்ளேன்' என்றேன்.

 உடனே அவன், 'ஏன் நீ தர்மசங்கடமான சூழ்நிலையில் சிக்க விரும்புகிறாய்?' என்றான்.

'என் நோக்கம் இஸ்லாத்தை பிறருக்கு எடுத்து இயம்புவது' என்றேன்.

உடனே அவன் 'இல்லை உன் நோக்கம் உன்னை எல்லோரும் பெரிய பேச்சாளன் எனப் பாராட்ட வேண்டும். இந்த பெருமை தான் உன்
அனைத்து நன்மைகளையும் அழித்துவிடும். அதனால், தாவாவை விட்டு விட்டு உன் சொந்த வேலையை செய்' என்றான்.

நான் 'எது உன்னை அழிக்கும்?' என்று கேட்டேன்.

அதற்கு அவன், 'குர்ஆனில் உள்ள ஆயத்துல் குர்ஸி (2வது அத்தியாயம் 255வது வசனம்)  யார் ஓதுகிறார்களோ அவர்களை என்னால் ஒன்றும் செய்ய முடியாது. அவர்களுக்கு "அல்லாஹ் பாதுகாப்பு அளிக்கிறான்",' என்று கூறினான்.

நான் 'அடடே! அப்படியா', எனக் கூறிவிட்டு ஆயத்துல் குர்ஸியை ஓத ஆரம்பித்தேன்.

உடனே ஷைத்தான் கூக்குரலிட்டவாறு, அவ்விடத்தை விட்டு வெருண்டோடி மறைந்தான்.

எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே!

பார்த்தீர்களா ஷைத்தானுடைய விஷம, விபரீத விளையாட்டை!
எப்படி மனிதர்களை அவன் வழிகெடுக்கிறான் பாருங்கள்.

அவனுடைய வேலை நம்மை நேரடியாக நன்மை செய்வதை
தடுப்பது அல்ல - அதைத் தாமதப்படுத்தி அதன் மூலம் மறைமுகமாகத் தடுப்பதே.

இந்த உரையாடலை எடுத்துக் கொண்டால்

1. பஜ்ர் தொழ எழுபவரை என்ன கூறி தடுத்தான் -
'இப்பொழுது தான் பாங்கு கூறினார்கள். இகாமத் வரை சிறிது தூங்கு'.

பின்பு,
 இகாமத் கூறும்பொழுது 'விடிவதற்கு இன்னும் நேரம் இருக்கிறது. ஆகவே சிறிது தூங்கு' –

 ' அப்படியே தொழ மறந்தால் வீட்டில் தனியாக தொழ அனுமதி உள்ளதே'

என எப்படி நம்மை தொழுவதிலிருந்து தடுக்கிறான் பார்த்தீர்களா!


2. துஆ ஓத ஆரம்பித்தால், உடனே 'இரவு படுக்கும் முன் ஓதலாமே' எனக் கெடுப்பான்.

தூங்கும் முன் துஆ ஓத ஆரம்பித்தால், 'களைப்பாக இருக்கிறதே' என்ற எண்ணத்தை ஏற்படுத்தி ஓதாமல் தூங்கச் செய்து விடுவான்.

3. உம்ரா செல்ல நாடினால், சுன்னத்தை விட பர்ளு முக்கியம். எனவே, ஹஜ் செய்யலாமே, என்ற எண்ணத்தை ஏற்படுத்திக் கெடுப்பான்.

பின்பு ஹஜ் காலத்தில் தங்கை நிக்காஹ், மகனின் படிப்பு செலவு, வீடு கட்டுவது என பல்வேறு செலவினங்களை முன்னிறுத்தி ஹஜ் செய்வதையும் தடுப்பான்.


4. ஹராமான காரியங்களை - இசை போன்றது - ஹலால் மாதிரி காட்டுவான்.

ஹதீஸ் கலை வல்லுநர்களிடையே கருத்துவேற்றுமை உள்ளது - பலஹீனமான ஹதீஸ் என தவறான எண்ணத்தை ஏற்படுத்துவான்.

5. அந்நியப் பெண்ணை பார்க்கலாம் - 'முதல்பார்வைக்கு அனுமதி உள்ளது' என்பான் -

பின்பு, 'அழகை கலைக்கண் கொண்டு ரசிக்கலாம்' எனப் பாவம் செய்யத் தூண்டுவான்.

6. தாவா வேலை செய்வதைத் தடுக்க அவன் ஏற்படுத்தும் தீய எண்ணம் 'நாம் பெருமைக்கு செய்கிறோம்' எனத் தடுப்பது அல்லது நல்ல நோக்கில் செய்து வரும்போது மனதில் பெருமையை உண்டாக்குவது.

மேலும், மார்க்க அறிஞர்களை, ஆண்களை, பெண்களை, இளைஞர்களை எவ்வாறெல்லாம் வழிகெடுக்கின்றான் எனப் பார்த்தோம்.

அவனுடைய வழிமுறைகளை அறிந்த நாம் அவற்றிலிருந்து முற்றிலும் விலகிக் கொள்வதே சிறந்தது - நம்மை நரக நெருப்பில் வீழ்வதை விட்டும் தடுக்கும்.


அகிலங்களின் இறைவனான அல்லாஹ் தன் திருமறையாம் குர்ஆனில் கூறுகின்றான்,
' நம்பிக்கை கொண்டோர்களே! நீங்கள் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்து விடுங்கள். ஷைத்தானுடைய அடிச்சுவட்டைக் கூட பின்பற்றாதீர்கள்.  ஏனெனில், அவன் உங்களுக்கு பகிரங்க விரோதி ஆவான்'

உலகப் பொது மறை குர்ஆன் 2 : 208


ஆகவே, "இன்ஷாஅல்லாஹ்" நாம் அனைவரும் ஷைத்தானுடைய பாதையில் செல்வதிலிருந்து இறைவனிடம் பாதுகாவல் தேடுவோம்.
நம்முடைய மற்ற சகோதர, சகோதரிகளையும் அங்ஙனம்
செயல்பட அறிவுறுத்துவோம்.

No comments:

Post a Comment