Tuesday 22 March 2011

குர்ஆன் கூறும் மறுமை வாழ்வு

பூமி தூள் தூளாகத் தகர்க்கப்படும் போது, உம்முடைய இறைவனும், வானவரும் அணியணியாக வரும்போது, அந்நாளில் நரகம் முன் கொண்டு வரப்படும் போது - அந்நாளில் மனிதன் உணர்வு பெறுவான். அந்த (நாளில்) உணர்வு (பெறுவதினால்) அவனுக்கு என்ன பலன்.

 ''என் (மறுமை) வாழ்க்கைக்காக நன்மையை நான் முற்படுத்தி (அனுப்பி)யிருக்க வெண்டுமே!'' என்று அப்போது மனிதன் கூறுவான்.

ஆனால் அந்நாளில் (அல்லாஹ் செய்யும்) வேதனையைப் போல், வேறு எவனும் வேதனை செய்யமாட்டார்கள். மேலும், அவன் அன்பு காட்டுவது போல் வேறு எவனும் அன்பு காட்டமாட்டார்கள்.

(ஆனால், அந்நாளில் நல்லடியார்களிடம்) சாந்தியடைந்த ஆத்மாவே! நீ உன்னுடைய இறைவன்பால் திருப்தி அடைந்த நிலையிலும், (அவன்) உன்மீது திருப்தியடைந்த நிலையிலும் மீளுவாயாக. நீ என் நல்லடியார்களில் சேர்ந்து கொள்வாயாக. மேலும், நீ என் சுவர்க்கத்தில் பிரவேசிப்பாயாக (என்று இறைவன் கூறுவான்).
என்று அல்லாஹ் (உலகப் பொது மறை அல்- குரஆன்89:21-30 வது வசனங்களில்) கூறியுள்ளான்.


நாம் நமது வாழ்க்கையின் லட்சியம் என்னவென்று புரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.


பேருந்து நிலையத்தில் பல பேருந்துகள், வாகனங்கள் நிற்கின்றன. ஆனால் ஒரேயொரு பேருந்தில் மட்டுமே நாம் முண்டியடித்துக் கொண்டு ஏறுகிறோம். சில பேருந்துகளில் இருக்கைகள் காலியாக இருந்தும் நாம் ஏறுவதில்லை. ஏன்? நாம் போய்ச் சேர வேண்டிய இடத்திற்குச் செல்லும் பேருந்து அது தான். அதனால் தான் கம்பியைப் பிடித்துக் கொண்டு நின்றாகிலும், தொங்கிக் கொண்டாகிலும் அந்தப் பேருந்தில் ஏறிப் பயணம் செய்கின்றோம். அது போன்றே நமது இவ்வுலக வாழ்வின் இலட்சியம் மறுமையாகும். அதற்காக நாம் முயல வேண்டுமே தவிர வேறு நோக்கங்களுக்காக முயற்சி செய்யக் கூடாது.



இலட்சியம் இல்லாமல் வாழ்வதால் பலர் இரயில்கள் முன்பாய்ந்து தூக்குக் கயிற்றில் தொங்கி உயிரை மாய்த்துக் கொள்வதைப் பார்க்கிறோம்.


திட்டமாக மனிதன் மீது அவன் குறிப்பிடத்தக்கதொரு பொருளாகவே இல்லாதிருந்த ஒரு கால கட்டம் செல்லவில்லையா?


திட்டமாக மனிதன் மீது காலத்தில் ஒரு நேரம் வந்து, அதில் அவன் இன்ன பொருள் என்று குறிப்பிட்டுக் கூறுவற்கில்லாத நிலையில் இருக்கவில்லையா?

பின்னர் ஆண், பெண்) கலப்பான இந்திரியத்துளியிலிருந்து நிச்சயமாக மனிதனை நாமே படைத்தோம் - அவனை நாம் சோதிப்பதற்காக் அவனைக் கேட்பவனாகவும், பார்ப்பவனாகவும் ஆக்கினோம். நிச்சயமாக, நாம் அவனுக்கு வழியைக் காண்பித்தோம்.

(அதைப் பின்பற்றி) நன்றி உள்ளவனாக இருக்கின்றான். அல்லது (அதைப்புறக்கணித்து) நன்றியற்றவனாக இருக்கின்றான்.

(உலகப் பொது மறை அல்- குரஆன்76:1-3)


நாம் 30,40 வருடங்களுக்கு முன் இவ்வுலகில் இல்லை. மனிதனின் வாழ்க்கைப் பயணம் இல்லாமையிலிருந்து ஆரம்பமாகிறது. தாயும் தந்தையும் இணைவதால் புதிய சிருஷ்டி உண்டாகிறது. கண், காது, முகம் ஆகிய அழகிய உடலமைப்புடன் மனிதனாகிய நாம் பிறக்கிறோம்.

இல்லாமையிலிருந்து படைத்து, காது, கண், போன்ற அழகிய உடலமைப்பைத் தந்த வல்ல ரஹ்மானுக்கு மீண்டும் ஒரு முறை மறுமையில் உயிர் கொடுப்பது மிக எளிதானதே.

இறைவனையும் மறுமையையம் நிராகரிப்பவர்கள் பற்றிக் கூறும் போது,

நிராகரிப்பவர்களோ (இவ்வுலக சுகங்களை) அனுபவித்துக் கொண்டும், மிருகங்கள் தீனி திண்பது போல தின்று கொண்டும் இருக்கிறார்கள். (நரக) நெருப்பே இவர்கள் தங்கும் இடமாக இருக்கும். என்று உலகப் பொது மறை அல்- குரஆன்47:12 வது வசனத்தில் அல்லாஹ் கூறியுள்ளான்.


நமது வாழ்வின்இலட்சியம் உண்டு. தின்று சுகம் அனுபவிப்பது மட்டுமல்ல.
நாம் உங்களைப் படைத்ததெல்லாம் வீணுக்காக என்றும், நீங்கள் நம்மிடத்தில் நிச்சயமாக மீட்டப்பட மாட்டீர்கள் என்றும் எண்ணிக் கொண்டீர்களா? (உலகப் பொது மறை அல்குர்ஆன் : 23:115)
என்று இறைவன் கூறுகின்றான்.


நாம் இறந்து விட்டால் 6 அடி நிலத்தில் புதைத்து விடுகின்றனர். பின்னர் மீண்டும் நாம் மறுமையில் எழுப்பப்படுவோம்.

பரிசுத்த குர்ஆனில் தூக்கத்தைப்  மரணம் என்றே அல்லாஹ் குறிப்பிடுகின்றான். தூக்கத்திலிரந்து விழித்தெழுவதை மரணமடைந்து விழித்தெழுப்பப்படுவது போலக் கூறியுள்ளான்.


அல்லாஹ், உயிர்களை அவை மரணிக்கும் போதும், மரணிக்காதவற்றை அவற்றின் நித்திரையிலும் கைப்பற்றி, பின்பு எதன் மீது மரணத்தை விதித்துவிட்டானோ அதை(த் தன்னிடத்தில்) நிறுத்திக் கொள்கிறான். மீதியுள்ளவற்றை ஒரு குறிப்பிட்ட தவணை வரை (வாழ்வதற்காக) அனுப்பி விடுகிறான் - சிந்தித்துப் பார்க்கும் மக்களுக்கு, நிச்சயமாக அதில் அத்தாட்சிகள் இருக்கினறன.

(உலகப் பொது மறை அல்குர்ஆன் 39:42)

அதனால் தான் தூங்கும் போது,

அல்லாஹும்மா பிஸ்மி(க்)க  அமூ(த்)து வாஹிய அல்லது
பிஸ்மிகல்லாஹும்ம அஹ்யா வ அமூத்து
பொருள் : இறைவனின் பெயர் கொண்டு உயிர் பெற்ற (தூக்கம் என்ற) மரணத்துக்குத் தயாராகின்றேன் என்றும்,

தூக்கத்திலிருந்து விழித்தெழும் போது,

அல்ஹம்துலில்லாஹில்லதீ அஹ்யானா பஃதமா அமாதனா வ இலைஹின்னஷூர்
பொருள் : எங்களை மரணமடையச் செய்த பின் விழித்தெழச் செய்த அந்த அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரியது. அவனிடமே நமது மீளுதல் இருக்கிறது

(ஆதாரம் : புகாரீ, அபூதாவூத் 5049, திர்மிதீ 3413)

என்றும் கூறுகிறோம்.


மறுமை நாளைப் பற்றி அல்லாஹ் தனது பரிசுத்தக் குர்ஆனில் பல இடங்களில் கூறியுள்ளான்.

(தடுத்து நிறுத்த முடியாத) மறுமைப் பேரமளி வந்து விட்டால்
(உலகப் பொது மறை அல்குர்ஆன் 79:34)

என்றும்,

ஆகவே (யுக முடிவின் போது) காதைச் செவிடாக்கும் பெரும் சப்தம் வரும் போது
(உலகப் பொது மறை அல்குர்ஆன் 80:33)

என்றும்,
வானம் பிளந்து விடும்போது- நட்சத்திரங்கள் உதிர்ந்து விழும்போது- கடல்கள் (பொங்கி ஒன்றால் ஒன்று) அகற்றப்படும் போது, கப்றுகள் திறக்கப்படும் போது, ஒவ்வோர் ஆத்மாவும், அது எதை முற்படுத்தி (அனுப்பி) வைத்தது, எதைப் பின்னே விட்டுச் சென்றது என்பதை அறிந்து கொள்ளும்.
(உலகப் பொது மறை அல்குர்ஆன் 82:1-5)

மனிதர்களே! நீங்கள் உங்களுடைய இறைவனை பயந்து கொள்ளுங்கள். நிச்சயமாக (கியாமத்து நாளாகிய) அவ்வேளையின் அதிர்ச்சி, மகத்தான பெரும் நிகழ்ச்சியாகும். அந்நாளில், பாலூட்டிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு தாயும் தான் பாலூட்டும் குழந்தையை மறந்து விடுவதையும், ஒவ்வொரு கர்ப்பிணியும் தன் சுமையை ஈன்று விடுவதையும் நீங்கள் காண்பீர்கள். மேலும், மனிதர்களை மதி மயங்கியவர்களாக இருக்க காண்பீர். எனினும் (அது மதுவினால் ஏற்பட்ட) மதி மயக்கமல்ல் ஆனால் அல்லாஹ்வின் வேதனை மிகக் கடுமையானதாகும்.
 (உலகப் பொது மறை அல்குர்ஆன் 22:1 &2)
என்றும்,

மறுமை நாளில் சிதறடிக்கப்பட்ட ஈசல்களைப் போன்று மனிதர்கள் ஆகிவிடுவார்கள். மேலும் மலைகள் கொட்டப்பட்ட பஞ்சைப் போன்று ஆகிவிடும்.
(உலகப் பொது மறை அல்குர்ஆன் 101:4 & 5)
என்றும் மறுமையின் அமளிகள் திடுக்கங்கள் பற்றி அல்லாஹ் கூறியுள்ளான்.


மேலும் அந்த நரகத்தைக் கடக்காமல் உங்களில் யாரும் (சுவர்க்கம்) போக முடியாது. இது உம்முடைய இறைவனின் தீர்மானமாகும். அதன் பின்னர் இறைபக்தியுடன் இருந்தார்களே அவர்களை நாம் (அந்நரகத்திலிருந்து) ஈடேற்றுவோம். ஆனால் அநியாயம் செய்தவர்களை அந்த நரகத்தில் முழந்தாளிட்டவர்களாக விட்டு விடுவோம்.
என்று
(உலகப் பொது மறை அல்குர்ஆன் 19:71&72 )
வது வசனங்களில்) அல்லாஹ் கூறுகின்றான்.

இம்மையில் நாம் இறைவனுக்கு இணைவைத்திருந்தால் நமது நல்லறங்கள் யாவும் மறுமையில் பயனற்றுப் போய்விடும். பத்து பள்ளிகள் கட்டுவதற்கு உதவி செய்திருந்தாலும், இரவு கால்கடுக்க நின்று வணங்கியிருந்தாலும் ஏராளமான அறப்பணிகள் செய்திருந்தாலும் இறைவனுக்கு இணை வைத்த நிலையில் இவற்றைச் செய்திருந்தால் இந்த நல்ல பணிகளுக்கு எவ்விதக் கூலியும் கிடைக்காது.

எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை வைத்து விட்டானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கி விட்டான். மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும். அக்கிரமக்காரர்களுக்கு உதவி புரிபவர் எவருமில்லை. என்று அல்லாஹ்
(உலகப் பொது மறை அல்குர்ஆன் 5:72 வது வசனத்தில்)
கூறியுள்ளான்.

பத்ரீன்களே! என்று ஒருவன் கஷ்டகாலத்தில் அழைத்தால் யா முஹ்யித்தீனே! என்று அழைத்திருந்தால், 25 பைசா தர்ஹாக்களுக்க நேர்ச்சை செய்திருந்தாலும் அவன் இறைவனுக்கு இணை வைத்தவனாக ஆகி விடுகின்றான். அவனது நல்லறங்கள் எல்லாம் பாழாகி விடுகின்றன.


நபி (ஸல்) அவாகள் காட்டித் தராத பித்அத் களையும் விட்டொழிக்க வேண்டும். பித்அத்துகள் அனைத்தும் வழிகேடுகள். அனைத்தும் (அதைச் செய்பவனை) நரகில் கொண்டு சேர்த்து விடும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
(முஸ்லிம் 867, நஸயீ)

ஆக இணைவைத்தலும் பித்அத்துகள் என புதுமைகளும் மனிதனை நிரந்தர நரகில்தள்ளி விடும். எனவே அவற்றை நாம் விட்டு விலகி அல்குர்ஆன், நபிவழிப்படி வாழ வேண்டும். நரகம், மிகக் கொடிய தங்குமிடம் ஆகும். நரகில் வேதனை, அதில் கிடைக்கும் தண்டனை பற்றிக் குறிப்பிடும் போது,

நிச்சயமாக அது மஞ்சள் நிறமுள்ள ஒட்டகைகள் போல இருக்கும்.
என்று நரகத்தின் நெருப்பை (அல்லாஹ் உலகப் பொது மறை அல்குர்ஆன் 77:33 வது வசனத்தில்) வர்ணிக்கின்றான்.

மேலும்,
நரகவாசிகள் தோல்கருகிவிடும் போதெல்லாம் அவையல்லாத வேறு தோல்களை அவர்கள் வேதனையைப் பூரணமாக அனுபவிப்பதற்கென அவர்களுக்கு மாற்றிக் கொண்டே இருப்போம்.
(உலகப் பொது மறை அல்குர்ஆன் 4:56)

என்றும்,

நரகவாசிகளின் ஆடைகள் தார் (கீல் எண்ணையினால்) ஆனவையாக இருக்கும். இன்னும் அவர்களுடைய முகங்களை நெருப்பு மூடி இருக்கும்.
(உலகப் பொது மறை அல்குர்ஆன் 14:50)
என்றும்,

நிச்சயமாக நரகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது வரம்பு மீறியவர்களுக்குத் தங்குமிடமாக, அதில் அவர்கள் பலயுகங்களாகத் தங்கியிருக்கும் நிலையில் அவர்கள் அதில் குளிர்ச்சியையோ சுவைக்க மாட்டார்கள். கொதிக்கும் நீரையும், சீழையும் தவிர (அது தான் அவர்களுக்குத்) தக்க கூலியாகும்.
 (உலகப் பொது மறை அல்குர்ஆன் 78:21-26)

என்றும்,
அதை அவன் (சிரமத்தோடு) சிறிது சிறிதாக விழுங்குவான். எனினும் அது அவன் தொண்டையில் எளிதில் இறங்காது. ஒவ்வொரு திசையிலிருந்தும் அவனுக்கு மரணம் வந்து கொண்டிருக்கும். எனினும் அவன் இறந்து விடுபவனும் அல்லன். அன்றியும் அவன் முன்னே (மிகக்) கொடிய வேதனையும் உண்டு.
(உலகப் பொது மறை அல்குர்ஆன் 14:17)

என்றும் நரக வேதனைகள் பற்றி அல்லாஹ் கூறியுள்ளான். எனவே,


எங்கள் இறைவனே! நீ எவரை நரக நெருப்பில் புகுத்துகின்றாயோ அவரை நிச்சயமாக நீ இழிவுபடுத்தி விடடாய். மேலும் அக்கிரமக்காரர்களுக்கு உதவி செய்வோர் எவருமிலர்.
(உலகப் பொது மறை அல்குர்ஆன் 3:192)
என்று நல்லறிவுடைய நல்லோர் கூறுவர் என்றும் அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

இறைவா! மறுமையில் எங்களை நரக நெருப்பிலிருந்து பாதுகாத்து உனது சொர்க்கத்தில் எங்களைப் புகச் செய்வாயாக! ஆமீன்!!

No comments:

Post a Comment