Tuesday, 22 March 2011

சீரழிக்கும் சினிமா

இன்றைய மனித சமுதாயத்தை, குறிப்பாக இளைஞர்களை சீரழித்துக் கொண்டிருப்பதில் சினிமா எவ்வளவு பெரிய பங்கு வகிக்கின்றது என்பது நாடறிந்த உண்மை.

காசுக்காக வேஷம் போடுகின்ற ஒரு கலைதான் சினிமா.

அதில் எல்லாமே போலியானது.
எதார்தத்திற்கு நேர்மாற்றமானது.

ஒரு படத்தில் ஒரு நபருக்குத் தாயாக நடிக்கும் ஒரு பெண் இன்னொரு படத்தில் மனைவியாகவும், வேறு ஒரு படத்தில் தங்கையாகவும் நடிக்கின்ற காட்சிகளைத்தான் அதிகமாகப் பார்க்க முடிகின்றது.


ஆபாசக் காட்சிகள் இல்லாத படம் எடுபடாது என்று கூறுமளவிற்கு எல்லாப் படங்களிலும் ஆபாசம் தலவிரித்தாடுகிறது.

பெண்களின் தொப்புளுக்குக் கீழே திறந்த வண்ணம் காட்சிகள். மார்பகங்களை அறைகுறையாகக் காட்டினால்தான் ரசிகர்களை கவர முடியும் என்ற நிலை. உடலைக் குலுக்கி குலுக்கிக் காட்டுவதிலும் அதைப் பார்த்து ரசிப்பதிலும் இளைஞர்களுக்கு எத்தனை குஷி. இதில் கிழவர்களும் விதிவிலக்கல்ல. முத்தக் காட்சிகள், கற்பழிப்புக் காட்சிகள் சினிமாவில் தலைவிரித்தாடுகின்றன.


கணவன் மனைவி தனி அறையில் செய்ய வேண்டியவற்றை லட்சக்கணக்கான மக்கள் பார்த்து ரசிக்கக் காட்டுகின்ற கேவலமான நிலை இன்றைய சினிமாக்களில் காட்டப்படுகின்றது.


ஆபாசம் கூடாது என்று சொல்லும் அரசாங்கம் சினிமாவில் ஆபாசத்தைத் திறந்து விட்டிருக்கிறது. இதையெல்லாம் பார்க்கின்ற இளைஞர்கள் ஏன் ஈவ்டீஸிங்கில் ஈடுபடமாட்டார்களா?

சீரழிவதற்குண்டான எல்லா வாசல்களையும் அரசாங்கம் திறந்து விட்டு விட்டு, இளைஞர்களை சீரழியும் போது அவர்களைத் தண்டிப்பது என்பது புத்திக்குப் பொருந்தாத செயல் அல்லவா?

அடிதடி, வெட்டு, குத்து, வன்முறைக் காட்சிகளை கற்பனையாக சித்தரித்து சினிமாவில் காட்டி விட்டு அதன் மூலம் கோடிகளை சுருட்டி விட்டு சுகமாக இருந்து விடுகின்றனர் தாயாரிப்பாளர்களும், ஸ்டார்கள் என்னும் நடிகர்களும்.


அயாராது அன்றாடம் உழைத்த காசைக் கொண்டு இந்த காட்சிகளைப் பார்க்கின்ற அப்பாவிகள் பயங்கரவாதச் செயலுக்கு இதன் மூலம் பயிற்சி எடுக்கின்றனர்.

வெளியே அதைச் செயல்படுத்தியும் காட்டுகின்றனர். துப்பாக்கியால் எப்படிச் சுட வேண்டும்? வெடி வீசி எப்படித் தாக்க வேண்டும்? தீ வைத்து எப்படிக் கொளுத்த வேண்டும்? இது போன்ற எல்லா வன்முறைகளையும் சினிமாவில் அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றனர். +

இந்த வன்முறைக் காட்சிகளுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கி விட்டு வெளியிலே யாராவது அது போன்று செய்து விட்டால் அதைப் பயங்கரவாதமாகச் சித்தரித்து சட்டங்களைக் கெடுபிடியாக்குகின்றது.


பொது இடங்களில் புகைப்பிடித்தல் கூடாது என்பது அரசாங்கத்தின் சட்டம். ஆனால் சினிமாவிலோ சர்வசாதரணமாக புகைப்பிடிப்பது காட்டப்படுகிறது.

சிகரெட்டை பிடிக்கின்ற ஸ்டைலே தனி. இதையெல்லாம் பார்க்கின்ற இளைஞர்கள் அதைப் போன்று செய்து சீரழிந்து கொண்டிருக்கின்றனர்.


சினிமா நடிகர்களின் கட்அவுட்டுகளுக்கு பால் அபிஷேகம் செய்யக் கூடிய அளவிற்கு இன்று இளைஞர்கள் பைத்தியம் பிடித்து அலைகின்றனர்.

அழிவிற்கு அழைத்துச் செல்லும், எதார்த்தத்திற்கு மாற்றமான நடிப்புக் காட்சிகளைக் கொண்ட சினிமாவின் முதல் இரவு காட்சிகளைக் காண்பது ஏதோ சொர்க்கலோகத்திற்கு உள்ளே சென்று விட்டது போன்ற எண்ணத்தை இளைஞர்களின் உள்ளங்களிலும் உருவாக்கி விடுகிறது.


சினிமாவிலே போலி வேஷங்கள் போட்டு வயிற்றுப் பிழைப்பு நடத்திக் கொண்டிருப்பவர்களை ஏதோ பெரிய சாதனை புரிந்து விட்டது போன்றும் கடவுளின் அவதாரம் போன்றும் சித்தரிக்கின்ற அவலநிலை நாடு முழுக்கத் தலைவிரித்தாடுகிறது. அரசாங்கத்தினுடைய முழு அரவணைப்போடு இவையெல்லாம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

காரணம் ஆட்சிக் கட்டிலிலே இருப்பவர்களும் ஒரு காலத்தில் சினிமாவில் ஆட்டம் போட்டவர்கள் தானே. நாட்டு மக்களிடையே ஒழுக்க வீழ்ச்சிக்கும், சமுதாய சீர்கேடுகளுக்கும், பயங்கரவாதம் பரவுவதற்கும் முழுக் காரணம் சீரழிக்கும் சினிமா தான். இந்த சினிமா ஒழிந்தால் தான் நாட்டு மக்கள் சுபீட்சமாக வாழ முடியும்.

No comments:

Post a Comment