Tuesday 22 March 2011

தனிநபர் வழிபாட்டைத் தரைமட்டமாக்குவோம்.

மனிதர்கள் கடவுளர்களாக ஆக்கப்படுவதற்கும் அவர்களுக்குச் சிலைகள் எழுப்பி ஆராதிக்கப் படுவதற்கும் காரணமாக இருந்தது தனிநபர் வழிபாடுதான்.

தன்னைப் போன்று படைக்கப்பட்ட மனிதனை அளவுக்கு அதிகமாக ஆற்றல் இருப்பதாகக் கருதி, அவனை வானளவு புகழ்ந்து தெய்வத் தன்மையைக் கொடுப்பதற்கும் காரணமாக இருந்தது. இந்த தனிநபர் வழிபாடுதான்.


கடந்த கால வரலாறு இதைத்தான் நமக்குப் போதிக்கின்றது.

இறைத்தூதர் நூஹ் (அலை) அவர்களுடைய காலத்தில் வாழ்ந்த மக்கள் சில மனிதர்களின் மீது வரம்பு மீறி மரியாதை வைத்து அவர்கள் இறந்து விட்ட பின்னர் அவர்களுக்கு சிலைகள் வடிவமைத்து அவற்றை வழிபடத் துவங்கினர்.

இதைப் பற்றி அல்லாஹ் கூறும் போது

'மேலும் அவர்கள் அம்மக்களிடத்தில் 'உங்கள் தெய்வங்களை விட்டு விடாதீர்கள், இன்னும் வத்து, ஸுவாவு, யகூஸு, யவூகு, நஸ்ரு ஆகிய விக்கிரகங்களையும் நீங்கள் விட்டு விடாதீர்கள்' என்றும் சொல்கின்றனர். நிச்சயமாக அவர்கள் அநேகமானவர்கள் வழிகெடுத்து விட்டனர். ஆகவே அநியாயக்காரர்களுக்கு வழிகேட்டைத் தவிர வேறு எதையும் நீ அதிகப்படுத்தாதே. (என்று நூஹ் பிரார்த்தித்தார்)

 (அல்குர்ஆன் 71:23,24)

இது கடந்த கால் வரலாறு. ஆனால் தற்கால்த்தில் பெரும்பாலான மனித சமுதாயம் கடவுளாகக் கருதி வணங்கி வருகின்ற சிலைகளின் வரலாறும் இவ்வாறு தான் இருக்கின்றன. சாதாரண மனிதர்களாக வாழ்ந்து மடிந்து போனவர்களை கடவுளர்களாக ஆக்கி வழிபடுகின்றனர். நேற்று வரை நம் கண்முன்னால் வாழ்ந்த எத்தனையோ பேர்கள் இறந்ததின் பின்னால் அவர்களுக்கு சிலை எழுப்பி மாலை அணிவித்து அபிஷேகங்கள் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு கோவில்களும் கட்டப்பட்டுள்ளன.
இப்படிப்பட்ட கேவலமான நிலை இஸ்லாமியர்களிடையே வந்து விடக்கூடாது என்பதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிகவும் குறியாக இருந்தார்கள்

.
தமது வாழ்க்கையின் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தனிநபர் வழிபாட்டிற்கான அறிகுறிகள் காணப்பட்ட போதெல்லாம் அதை உடனுக்குடன் தடுத்து நிறுத்தியுள்ளார்கள். தமது கடைசி கட்டத்தில் சமுதாயத்திற்கு மிகவும் எச்சரிக்கை விடுக்கும் முகமாக

'கிறிஸ்தவர்கள் மர்யமுடைய மகன் ஈஸாவை வரம்பு மீறி புகழ்ந்ததைப் போன்று என்னையும் வரம்பு மீறி புகழ்ந்து விடாதீர்கள். என்றாலும் என்னை 'அல்லாஹ்வுடைய அடிமை' என்றும் 'அவனுடைய தூதர்' என்றும் கூறுங்கள்' என்று கூறினார்கள்.
(ஆதாரம் : முஸ்லிம் )

நபிகள் நாயகம் (ஸல்) இவ்வாறு கட்டளையிட்டு தனிநபர் வழிபாட்டிற்கு சாவுமணி அடித்தார்கள், தானும் மற்றவர்களைப் போன்று ஒரு மனிதர் தான் என்பதை பிரகடனப் படுத்துமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் கட்டளையிட்டான்.


'நிச்சயமாக நான் உங்களைப் போன்ற ஒரு மனிதனே, நிச்சயமாக உங்களுடைய நாயன் ஒரே நாயன் தான் என்று எனக்கு இறைச் செய்தி (வஹி) அறிவிக்கப்பட்டுள்ளது. என்று நபியே நீர் கூறுவீராக'

(அலகுர்ஆன் 18:110)


சமுதாயத்தில் அன்று முதல் இன்று வரை உருவெடுத்த எல்லா விதமான பிரிவினைகளுக்கும், குழப்பங்களுக்கும் மூலகாரணமாக இருந்தது தனி நபர் வழிபாடுதான்.

மத்ஹபுகள் தோன்றுவதற்கு முக்கிய காரணம் தனி நபர்கள் மீது கொண்ட பக்திதான்.

அவர் சொன்னல் சரியாகத்தான் இருக்கும் என்ற அளவுக்கு அதிகமாக  நம்பிக்கையும் இதற்கு காரணம். தன்னுடைய கருத்து தான் சரியானது என்பதை நிரூபிப்பதற்கு தன்பக்கம் ஆதரவாளர்களைத் திரட்டுவது, அதற்கு எதிராக இன்னொருவர் தனக்கு ஏற்புடைய கருத்தைக் கூறுவது, அதில் பிடிவாதம் காட்டுவது. அதற்கு சாதகமாக குரல் கொடுக்க ஒரு கூட்டம் உருவாகுவது இப்படித் தான் பிளவு ஏற்பட்டன, என்பதைக் கடந்தகால வரலாறுகள் கூறுகின்றன.


இது போன்ற தனிநபர் வழிபாட்டை முறியடித்துச் சமத்துவச் சமுதாயத்தை உருவாக்கி, குர்ஆன் சுன்னாவின் அடிப்டையில் மக்கள் செயல்படத் தூண்ட வேண்டும்

'வேதத்தையுடையோரே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் வரம்பு மீறிச் செல்லாதீர்கள். அல்லாஹ்வைப் பற்றி உணமையைத் தவிர வேறெதையும் கூறாதீர்கள்'

(அல்குர்ஆன் 4:171)

No comments:

Post a Comment